சுனாமி பேரழிவின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் கடலோர மாவட்டங்களில் அஞ்சலி
சென்னை, டிச.26 - 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரழிவின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை சுனாமி சூறையாடிச் சென்றது. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். குறிப்பாக நாகப்பட்டினத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், கன்னியாகுமரியில் 800-க்கும் அதிகமானோரும் உயிரிழந்தனர். அந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு, சென்னை காசிமேட்டில் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் சுனாமி நினைவு தூண்களில் மலர்வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் உறவினர்கள், மீனவர்கள், பொதுமக்கள், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பல இடங்களில் மவுன ஊர்வலமும், அஞ்சலியும் நடைபெற்றது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் சுமார் 1.50 லட்சம் மீனவர்கள் வெள்ளியன்று (டிச.26) கடலுக்குச் செல்லவில்லை. வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.