tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூர், டிச.11-  ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்த பள்ளி ஆசிரியருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. நாகை மாவட்டம் ஆலத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (46) தஞ்சாவூர் அருகேயுள்ள தனியார் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் 2022 ஆம் ஆண்டில் அப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து, பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.  இந்த வழக்கை நீதிபதி ஜெ.தமிழரசி விசாரித்து, பாலசுப்பிரமணியத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான  குறைதீர்க்கும் முகாம்

பெரம்பலூர், டிச.11-  பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், க.எறையூர் கிராமத்தில் டிச.13 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வி.வாசுதேவன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ந.சக்திவேல் தலைமையிலும், குன்னம் வட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  ரெ.சுரேஷ்குமார் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், அயினாபுரம் கிராமத்தில், தனித்துணை ஆட்சியர் சு. சிவக்கொழுந்து தலைமையிலும் நடைபெறும் இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.