பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலியான துயரம்!
கடலூர், ஜூலை 8 - கடலூர் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட்டை மூடாமல் விட்டதாலும், ரயில்வே கீப்பரின் அலட்சியத்தாலுமே இந்த விபத்து நடந்திருப்பது முதற்கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் மருதாடு பகுதியில் கிருஷ்ணசாமி மெட்ரிக் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு சொந்த மான வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) காலையில் வழக்கம் போல் பள்ளி வேன் ஒன்று தனக்கான வழித்தடத்தில் சென்று மாணவர்களை ஏற்றிச் சென்றது. வேனை சங்கர் (47) ஓட்டிச் சென்றுள் ளார். தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் நிவாஸ் (12 ), சுப்பிரமணிய புரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிடமணி மகள் சாருமதி (16), செழியன் (15), விஷ்வேஷ் (16) ஆகியோர் சென்றனர். இந்த வேன், செம்மங்குப்பம் அருகே திறந்திருந்த ரயில்வே கேட் தண்ட வாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக விழுப்புரத்தில் இருந்து மயிலாடு துறை நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதியது. இதில், பள்ளி வேன் நொறுங்கி பல அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப் பட்டது. ரயில்வே மின்சார கம்பிகளும் அறுந்து விழுந்தன. இந்த விபத்தில் மாணவர்கள் நிவாஸ், சாருமதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செழியன், விஷ்வேஷ், ஓட்டுநர் சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் போது ரயில்வே தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த அண்ணாதுரை என்பவர் குழந்தைகளை காப்பாற்றச் சென்ற நிலையில், அவர் ரயில்வே மின்சாரம் பாய்ந்து காயமடைந்தார். இவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலத்த காயம் அடைந்த செழியன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. கேட் கீப்பர் மீது தாக்குதல் ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட்டினை மூடாமல் ரயில்வே கேட் கீப்பர் காட்டிய அலட்சியமே 3 குழந்தைகளின் உயிரைப் பறித்ததாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது தாக்குதல் நடத்தினர். அவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்களிடமிருந்து பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றார். ரயில்வே கோட்ட மேலாளர் சமாளிப்பு இதனிடையே, விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்திய திருச்சி ரயில்வே கோட்டமேலாளர் அன்பழகன், “காலை 7.10க்கு ரயில் வருவதை அறிந்து 7.06க்கு கேட்டை, கேட் கீப்பர் மூடியுள்ளார். ரயில் வருவதற்குள் கடந்து விடுகிறோம் என இருசக்கர வாகன ஓட்டிகள் அழுத்தம் கொடுத்ததால்தான் கேட்டை திறந்துள்ளார். கேட் கீப்பர் செய்தது தவறுதான். அப்படி செய்திருக்கக்கூடாது” என்றார். மேலும், “செம்மங்குப்பம் லெவல் கிரா சிங்கில் ரயில்வேயின் நிதியில் சுங்கப்பாதை அமைக்க தெற்கு ரயில்வே ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது என்றும், ஆனால், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை அமைக்க கடந்த ஓராண்டு காலமாக மாவட்ட ஆட்சியர் அனுமதி தரவில்லை” என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை ஒன்றையும் போட்டுத் தப்பித்துள்ளது. “ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது” ஆனால், இந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில், கேட் கீப்பரின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நடந்தது” என்று கூறியுள்ளனர். “தாம் கேட் கீப்பரிடம் எதுவும் பேசவில்லை. ரயில்வே கேட் மூடப்படவில்லை. திறந்தே இருந்தது என்று கிருஷ்ணசாமி பள்ளி வேன் ஓட்டுநர் வாக்குமூலம் அளிக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியிருக்கிறது. மேலும், தமிழ்நாடு காவல்துறை யினர் நடத்திய விசாரணையில் இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் விஷ் வேஷ் கூறுகையில், “ரயில்வே கேட்டை வேன் ஓட்டுநர் திறக்க சொல்லவில்லை. கேட் கீப்பர் சொல்வது முற்றிலும் பொய். ரயிலின் சத்தம் கேட்டது. கேட் திறந்து இருந்ததால் ரயில் கடந்து போயிருக்கும் என நினைத்து சென்றோம். இந்த விபத்து நடந்த பிறகும்கூட கீப்பர் அங்கு வரவில்லை” என்று கூறியுள்ளார். அமைச்சர் ஆறுதல் முன்னதாக இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கடலூர் கோ.ஐயப்பன், நெய்வேலி சபா. ராஜேந்திரன், மேயர் சுந்தரி ராஜா உள்ளிட் டோர் மருத்துவமனைக்கு வருகை தந்து காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், கடலூர் எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் உடன் இருந்தனர். முதல்வர் இரங்கல்: நிவாரணம் அறிவிப்பு ரயில் விபத்தில் குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குழந்தை களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகமும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.