சாலையோர வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து தேர்தல் நடத்த வேண்டும் வியாபாரிகள் கூட்டமைப்பு மனு
திருச்சிராப்பள்ளி, மார்ச் 24- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர அனைத்து சாலையோர வியாபாரிகளின் கூட்டமைப்பு தலைவர் செல்வி, செயலாளர் அன்சர்தீன், பொருளாளர் அஷ்ரப் அலி ஆகியோர், அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு, தனியார் நிறுவனம் மூலமாக மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இதில் சாலையோர வியாபாரிகள் அல்லாதோர் அதிகப்படியாக பட்டியலில் உள்ளனர். காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் பெயரும், அவர்களிடம் வேலை செய்யும் வேலையாட்கள் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளன என்பதை பலமுறை மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்தும், பலன் இல்லை. இதனால், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் இறந்தவர்கள் பெயர் மற்றும் வியாபாரிகளே அல்லாதோர் (வியாபாரம் செய்யாத) நபர்களின் பெயர்கள் அதிகப்படியாக உள்ளது என்பதால் முறையாக கணக்கெடுப்பு நடத்தி, சாலையோர வியாபாரிகளின் தேர்தலை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகையால் மீண்டும் சாலையோர வியாபாரிகளை முறையாக கணக்கெடுப்பு நடத்தி உண்மையாக உள்ள வியாபாரிகளின் பெயர்களை சேர்த்து, சாலையோர வியாபாரிகளின் தேர்தலை முறையாக நடத்திட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என கூறியிருந்தனர். இதேபோன்று மாநகராட்சி ஆணையரிடமும் மனு கொடுக்கப்பட்டது.