மதுரை:
ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்கக் கூடாது என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஜூன் 10 வியாழனன்று அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்திய ரயில்வேக்கு சொந்தமான 15 விளையாட்டு மைதானங்களை “ரயில் நிலம் மேம்பாட்டு ஆணையத்தின்” வசம் வணிக பயன்பாட்டு நோக்கத்திற்காக ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் தனியாருக்கு விற்பதுதான். இப்பட்டியலில் சென்னை ஐ.சி.எப் விளையாட்டு வளாகமும் உண்டு. ரயில்வே பயணியர் சேவை போக்குவரத்து உட்பட பல ரயில் நிறுவனங்களை தனியாருக்கு விற்கிற முடிவை மக்கள் கவலையோடு எதிர் நோக்கியுள்ள சூழலில் விளையாட்டு மைதானங்களை விற்பது என்ற முடிவு மேற்கொள்ளப் பட்டிருப்பது தேச விரோதமானது. ரயில்வே வாரியத்தின் 18.05.2021 கடிதம் இந்த அபாயத்தை அமலுக்கு கொண்டு வர முனைந் துள்ளது. இந்திய ரயில்வே, ஒரு விளையாட்டு வளர்ச்சிஆணையத்தை கொண்டுள்ளது. இது சர்வதேச விளையாட்டு வீரர்களில் 50 சதவீதம் பேரையும் பதக்க வீரர்களில் மூன்றில் ஒரு பங்கையும் கொண்டிருக்கும் தனிப் பெரும் விளையாட்டு அமைப்பாகும். இந்த வீரர்கள் எல்லாம் கீழ் மட்டப்பணிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களே. இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி பயணச்சீட்டு பரிசோதகர் ஆவார். ‘தங்கக் கால்களுக்கு’ சொந்தக்காரரான பி.டி.உஷா அவர்களும் பயணச்சீட்டு பரிசோதகர் ஆவார். இவர்கள் எல்லாம்ரயில்வே மைதானங் களில் உள்ள ஆதார வளங்கள், வசதிகளை பயன்படுத்தியே இந்த உயரங்களை எட்டியுள்ளார்கள். இந்தியா இதுவரை வென்றுள்ள 21 ஒலிம்பிக் பதக்கங்களில் 13 ரயில்வே ஊழியர்கள் பெற்றுத் தந்தவை. அதுபோல அர்ச்சுனா விருது பெற்றவர் களில் பலர் ரயில்வே ஊழியர்கள்.
பாஸ்கரன்- ஹாக்கி
பி.டி.உஷா - தடகளம்
வெள்ளைசாமி- பளு தூக்குதல்
ராஜரத்தினம் - கபடி
ஜெகன்நாதன்- மேசைப் பந்து
தமிழ்ச் செல்வன் - உடற்கட்டு
சுசில்குமார் - மல்யுத்தம்
இவர்கள் எல்லோருமே விளையாட்டுக்கான ஆதார வளங்கள் கட்டணம் இன்றி ரயில்வே மைதானங்களில் சாமானிய மக்களுக்கும் கிடைத்ததாலேயே முன்னேறி வந்தவர்கள். இல்லையெனில் இவர்களுக்கு இந்த வளங்கள் எங்கே கிடைத்திருக்கும் என்பது கேள்விக் குறி. சமூகத்தில் அடித்தள ஆற்றல்களை அடையாளம் காணவும், பயன்படுத்தவும், வளர்க்கவும் இதுபோன்ற அரசு கட்டமைப்புகள் தேவை. அப்போதுதான் உலக அளவிலும், தேசிய அளவிலும் கொண்டாடத்தக்க பலர் கிடைப்பார்கள். இது வெறும் பணம் பண்ணுகிற செயல் அல்ல. தேசத்தின் பெருமையைப் பறைசாற்றுகிற ஆற்றல் மிக்க அடித்தள வீரர்களுக்கு வழியை அடைக்கிற அபாய முடிவாகும். வியாட்டுத் துறையின் விரிவான ஈர்ப்பை சிதைக்கிற செயல்ஆகும். ஆகவே இத்தகைய தவறான முடிவை ரயில்வே அமைச்ச கம் கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் வலியுறுத்தி யுள்ளார்.