திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பயணிகளின் 19 ஆண்டு கனவு நிறைவேறுகிறதுரயில் பயணிகள் மகிழ்ச்சி
ராமேஸ்வரம் - தாம்பரம் புதிய பாம்பன் விரைவு ரயில் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியால் ராமேஸ்வரத்தில் துவக்கி வைக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் நடுவில் 545 கோடி ரூபாய் செலவில் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேதி ஞாயிற்றுக்கிழமை புதிய பாம்பன் ரயில் பாலத்தையும், ராமேஸ்வரம் - தாம்பரம் இடையே புதிய தினசரி விரைவு ரயிலையும் பிரதமர் நரேந்திர மோடி நேரில் துவக்கி வைக்கிறார். திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் (150 கிலோமீட்டர்) அகல ரயில் பாதை அமைப்பதற்காக 2006 ஆம் ஆண்டில் இருந்து சென்னைக்கான தினசரி ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டு அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் வாரம் மும்முறை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கனவான சென்னைக்கான தினசரி இரவு நேர ரயில் சேவை தொடர்ந்து இயக்கப்படாமல் இருந்து வந்தது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரயில் பயணிகள் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் ஆகியோர் வைத்த கோரிக்கையினை ஏற்று, தற்போது இந்த ரயில் சேவை துவங்கி வைக்கப்படுகிறது. இந்த ரயில் இயங்கும் நேரம் மற்றும் ரயில் நின்று செல்லும் ரயில் நிலையங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாம்பன் விரைவு தினசரி சென்னை மற்றும் ராமேஸ்வரம் சென்று வர மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் இப்பகுதி ரயில் பயணிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், விவசாயிகள், சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மீட்டர் கேஜ் காலத்தில் கம்பன் விரைவு ரயில் இயங்கிய நேரத்தில் நின்று சென்ற அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்களில் பாம்பன் விரைவு ரயில் நின்று செல்லவும், திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையை விரைந்து மின்மயமாக்கல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.