குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களாகவே முடிவெடுக்க வேண்டும் மசோதா மீது ஆளுநர், ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது!
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விளக்கம்
புதுதில்லி, நவ. 20 - மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை காரணம் எதுவும் இல்லாமல் நிறுத்தி வைக்க ஆளுந ருக்கு அதிகாரம் இல்லை என்றாலும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட காலத்திற்குள் (time-bound manner) ஆளுநர்கள் முடிவெடுக்க வேண்டும்; இல்லாத பட்சத்தில் நீதிமன்றம் தலையிடும் என்று குறிப்பிட்டுள்ளது. எனினும், அந்த குறிப்பிட்ட கால அளவு என்ன? என்பதை விளக்கவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது “சட்டவிரோதம்” எனக்கூறி, சட்டப்பிரிவு 142-இன் கீழ் தமக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த மசோதாக்கள் அனைத்தும் நிறைவேறியதாக அறிவித்து, உச்சநீதிமன்ற அமர்வு கடந்த ஏப்ரல் 8 அன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. அத்துடன், நாட்டின் சட்டமன்றங்கள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு மாதமும், குடியரசுத் தலைவருக்கு 3 மாதமும் கால வரம்பு நிர்ணயித்தும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது. இது ஆளுநர், குடியரசுத் தலைவரின் அதிகார வரம்பு தொடர்பான முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்பட்ட நிலையில், 14 கேள்விகளைக் கொண்ட ஒரு கடிதத்தை (Presidential reference), குடியரசுத் தலை வர் திரௌபதி முர்மு உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பினார்.
இந்த கடிதம் மீது உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைகளை கோருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, ‘ஆளுநர்கள் மற்றும் குடியர சுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப் படும் மாநில அரசின் மசோதாக்களைக் கை யாளும் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி காலக்கெடுவை விதிக்க முடியுமா?’ என கேட்கப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவரின் இந்த கடி தத்திற்கு கேரளம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. குடியரசுத் தலைவரின் கடிதம் ஏப்ரல் 8 அன்று இரண்டு நீதிபதிகள் அமர்வு அளித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது என்றும், அந்த கடிதத்திற்கு உச்சநீதிமன்றம் பதிலளிக்கக் கூடாது என்றும் மனுத்தாக்கல் செய்தன. அப்போது, “குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளை தீர்ப்பின் மீதான மேல்முறையீடாக பார்க்க வேண்டாம் என்றும் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோருவதாகவே பார்க்க வேண்டும்” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார். தலைமை நீதிபதி பி.ஆர். கவாயும், “இது மேல்முறையீட்டு விசாரணை இல்லை என்றும் குடியரசுத் தலைவருக்கு ஆலோச னை வழங்கும் அதிகார வரம்பிலேயே நாங்கள் இந்த மனுவை விசாரிக்கிறோம்” என்று தெளிவுபடுத்தினார். மேலும், இந்த வழக்கின் விசாரணை ஏற்கெனவே (ஏப்ரல் 8 அன்று) வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யாது என்றும் விளக்கியிருந்தார். இந்தப் பின்னணியில், கேரள அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணு கோபால், தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி, மேற்குவங்க மாநில அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிர மணியம், பஞ்சாப் சார்பில் மூத்த வழக்கறி ஞர் அரவிந்த் பி. தாதர் ஆகியோர் ஆஜராகி, மசோதாக்களை நிறுத்தி வைக்கும் ஆளு நர்களின் அதிகார வரம்பில் நீதித்துறை யின் தலையீட்டை ஆதரித்து வாதங்களை வைத்தனர். ஒன்றிய அரசின் தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மகாராஷ்டிரா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, சத்தீஸ்கர் அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி உள்ளிட்டோர் ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று வாதிட்டனர்.
ஆகஸ்ட் மாதம் துவங்கி 10 நாட்கள் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 11 அன்று தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நிலையில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி பி.எஸ். நரசிம்மா, நீதிபதி ஏ.எஸ். சந்துர்கர் ஆகி யோர் அடங்கிய 5 நீதிபதிகள் அமர்வு வியாழக்கிழமை (நவ. 20) அன்று குடியரசுத் தலைவர் எழுப்பியிருந்த 14 கேள்வி களுக்கும் பதிலளித்துள்ளது. 1. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200-இன் கீழ் ஒரு மசோதா ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு 3 வாய்ப்புக்கள் மட்டுமே உள்ளன. மசோ தாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், சட்ட மன்றத்திற்கு திருப்பி அனுப்பலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புத லுக்காக ஒதுக்கி வைக்கலாம். நான்கா வது வாய்ப்பு அவருக்கு இல்லை. அவைக்கு திருப்பி அனுப்பாமல் மசோ தாவை காலவரையின்றி ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. அவ்வாறு நிறுத்தி வைப்பதை அனுமதிப்பது, கூட் டாட்சிக் கொள்கையை அவமதிப்ப தாகும். 2. பொதுவாக, ஆளுநர் என்பவர் அமைச் சரவைக் குழுவின் உதவி மற்றும் ஆலோ செயல்பட முடியும். ஒரு மாநிலத்தில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக்கூடாது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம்; ஆளுநருக்கு அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசும் அமைச்சரவையும்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவை - ஆளுநர் அல்ல. ஆனால், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200-இன் கீழ், ஒரு மசோதா மீது முடிவெடுக்கும் விவகாரத்தில், அவர், அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவரல்ல. மசோதாவைத் திருப்பி அனுப்புவதற்கோ, குடியரசுத் தலைவருக்கு ஒதுக்குவதற்கோ ஆளுநருக்கு விருப்புரிமை உள்ளது. 3. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200-இன் கீழ் மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்க விருப்புரிமையைப் பயன்படுத்தலாம். அதாவது, மசோதாவை சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பலாம், அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். அந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதேநேரம், மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில், வெளிப்படையற்ற வகையிலும், எந்தவொரு காரணமும் இல்லாமலும், காலவரையற்ற முறையில் ஆளுநர் தாமதமாக நடந்து கொள்ளும் போது, நீதிமன்றம் தலையிட்டு வரையறுக்கப்பட்ட அளவில் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். 4. ஆளுநரின் நடவடிக்கைகளை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு இந்திய அரசியலமைப்பின் பிரிவு 361 முழுமையான தடை விதிக்கவில்லை. இந்திய அரசியலமைப்பின் 200-ஆவது பிரிவின் கீழ் நீதித்துறை தலையீட்டிலிருந்து ஆளுநர் தனிப்பட்ட விலக்குரிமையைப் பெற்றிருந்தா லும், ஆளுநர் நீண்டகாலமாக செயல்படாத விவகாரங்களில் பிரிவு 361-ஐ காரணம் காட்டி, நீதித்துறையின் வரையறுக்கப்பட்ட மறு ஆய்வை மறுக்க முடியாது. ஆளுநர் பதவி இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. குடியரசுத் தலைவர் எழுப்பிய 5, 6, 7 ஆகிய 3 மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதிலாக அளித்துள்ள நீதிபதிகள், பிரிவுகள் 200 மற்றும் 201-இன் கீழ், மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் விருப்புரிமைக்கு அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு எதுவும் இல்லாத நிலையில், நீதிமன்றம் நீதித்துறை ரீதியாக காலக்கெடு நிர்ணயிப்பது பொருத்தமானதாக இருக்காது. குறிப்பாக, பிரிவு 201-இன் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமைக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது. 8. ஆளுநரால், தமக்கு மசோதாக்கள் அனுப்பி வைக்கப்படும் ஒவ்வொரு முறையும், குடியரசுத் தலைவர் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 143-இன் கீழ், உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற வேண்டிய அவசியமில்லை. தெளிவு இல்லாமை அல்லது ஆலோசனை தேவை இருந்தால், அப்போது மட்டும் பிரிவு 143-இன் நீதித்துறையின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் பெறலாம். 9. அதேபோல, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200 மற்றும் பிரிவு 201 இன் கீழ் ஒரு மசோதா மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதற்கு முன்போ, அந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்போ, மசோதாவின் உள்ளடக்கங்கள் மீது நீதித்துறை தலையிட முடியாது. மசோதாக்கள் சட்டமாக மாறினால் மட்டுமே, அவற்றின் குறைபாடுகள் குறித்து நீதிமன்றங்கள் தலையிட முடியும். 10. பிரிவு 142-இன் கீழ் இந்திய அரசியலமைப்பு உச்சநீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் உத்தரவுகளை மாற்றுவதற்குப் பயன்படுத்த முடியாது. அதேபோல ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் இல்லாமலேயே மசோதாக்கள் நிறைவேறியதாகவும் பிரிவு 142-ஐ பயன்படுத்தி அறிவிக்க முடியாது. 11.
மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டம், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடை முறைக்கு வருவது பற்றிய கேள்விக்கே இட மில்லை. சட்டமன்ற செயல்பாட்டில் அரசி யலமைப்பு பிரிவு 200 வழங்கியுள்ள அதி காரத்தின்படி, ஆளுநருக்கு உள்ள பங்கை, உச்சநீதிமன்றத்தால் மாற்ற முடியாது. 12. நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்போதே, இந்த வழக்கு கணிசமான வகையில் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கேள்விகளை உள்ளடக்கி யது என்று முன்கூட்டியே உணர்ந்து, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 145(3)-இன் கீழ் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை பரிந்துரைக்க வேண்டாமா? என்று குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதனை பொருத்தமற்ற கேள்வி என்று குறிப்பிட்டு, குடியரசுத் தலைவருக்கே திருப்பி அனுப்புவதாக தெரிவித்தனர். 13. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 142-இன் கீழ் உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரத்தை எந்தெந்த சட்ட விஷயங்களிலெல்லாம் பயன்படுத்த முடியும் என்ற கேள்விக்கு கேள்வி எண் 10-க்கு அளிக்கப்பட்டதில் பதில் உள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 14. ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு இந்திய அரசியலமைப்பின் பிரிவு 131, உச்சநீதிமன்றத்திற்கு வழங்கும் பிரத்யேக அதிகாரம் போன்ற வேறெந்த அதிகாரத்தையும் அரசியலமைப்புச் சட்டம் தடைசெய்கிறதா? என்ற கேள்வியையும் பொருத்தமற்றது என்று கருதி உச்சநீதிமன்றம் பதிலளிக்கவில்லை.
