tamilnadu

img

ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

இவர்களின் வளர்ச்சிதான்..!

திரிபுராவில் அமைச்சராக உள்ள பிகாஷ் தேப்பர்மா கோடிகளில் திளைத்துக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் தில்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பு, ஒரு பெட்ரோல் பங்க், திரிபுராவில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்று வாங்கிக் குவித்துள்ளார். மற்றொரு அமைச்சரும், அவருடைய குடும்பமும் 2021ஆம் ஆண்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கான குடும்ப அட்டை வைத்திருந்தனர். அமைச்சரின் சகோதரர் பெயரில் தர்மாநகர் மற்றும் கைலாஷகர் ஆகிய நகரங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. வளர்ச்சி என்பதெல்லாம் இவர்கள் இந்த மாதிரி சொத்துக்களை வாங்கி தங்களை வளர்த்துக் கொள்வதுதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜிதேன் சவுத்திரி விமர்சித்துள்ளார்.

அரசியல் விசுவாசம்

மாற்றுக் கருத்தை நசுக்கும் முயற்சியே ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்கலைக்கழக மத்திய நூலகத்தில் முக அடையாளத்தைப் பதிவு செய்து அனுமதி பெறும் முறைக்கு மாணவர் பேரவை எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு எதிராகப் போராட்டமும் கடந்த ஆண்டு நடந்தது. அதில் பங்கேற்ற முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர் பேரவை நிர்வாகிகளைத் தற்காலிக நீக்கம் செய்வதாக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மாற்றுக் கருத்தை நசுக்கும் இந்த முயற்சி எதிர்வினையைத் தரும். தங்கள் அரசியல் விசுவாசத்தைக் காட்டவே இந்த முயற்சியை நிர்வாகம் எடுத்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

நாடகம் மட்டும் போலியல்ல..

வாயைத் திறந்தாலே வெறிப்பேச்சுதான் என்று பாஜகவின் நிஷிகாந்த் துபே பற்றிச் சொல்வார்கள். ஆதாரங்களுடன் ராகுல் காந்தி பிரச்சனையை எழுப்பி, அதற்குப் பதில் சொல்ல முடியாமல் பிரதமர் அவைக்கு வர முடியாமல் போனது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தத் தொடங்கினர். ஏற்கெனவே வாய்க்கு வந்தபடி பேசி, வாங்கிக் கட்டிக் கொண்ட நிஷிகாந்த் துபேவை இந்த முறை எதிர்க்கட்சிகளைத் திட்டுவதற்காக முன்னிறுத்தினர். அதோடு நிற்கவில்லை. துபேவுக்கு ஆபத்து இருப்பதாகவும் புரளி கிளப்பிவிட்டார்கள்.  அவரைப் பத்திரமாக நாடாளுமன்ற வளாகத்தை விட்டு அழைத்துச் செல்வது போன்ற நாடகத்தையும் நடத்தியுள்ளனர். நாடகம் மட்டும் போலியல்ல. போலிக் கல்விச் சான்றிதழ் விவகாரத்தில் சிக்கியவர் இந்த நிஷிகாந்த் துபே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

வேலியே பயிரை..

23 வயது இஸ்லாமிய இளைஞர் ஒருவரை அடித்துக்  கொன்ற  வழக்கில் இரண்டு காவல்துறை யினரை நீதிமன்றம் அழைத்துள்ளது. ஏட்டு ரவீந்தர்குமார் மற்றும் காவலர் பவன் யாதவ்  ஆகிய இருவரும் ஃபைசான் என்ற அந்த இளைஞரை வந்தே மாதரம் பாடச் சொல்லி அடித்ததற்கான காணொளி ஆதாரம் நீதிமன்றத்தின் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே இவர்கள் மீதான புகாரை சரியாக தில்லிக் காவல்துறை விசாரிக்காததால், சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் கொலைக்குற்றம் என்று குற்றப் பத்திரிகையில் சேர்க்கவில்லை. ஆனால், தில்லி நீதிமன்றம் ஆதாரங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. இது “வெறுப்பு செயல்” என்று சுட்டிக்காட்டி யிருக்கும் நீதிமன்றம், மதவெறி கொண்ட தாக்குதல் என்றும் கூறியிருக் கிறது. இவர்கள்தான் சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக நம்மால் நிறுத்தப்பட்டவர்கள் என்பது எவ்வளவு மோசமான நிலை என்று நீதிபதி மாயன்க் கோயல் மாநில அரசை வறுத்து எடுத்துள்ளார்.