தீக்கதிர் எண்ம பதிப்பு பொறுப்பாசிரியர் எம்.கண்ணன் பங்கேற்பு கியூபாவில் சர்வதேச இடதுசாரி பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு
கியூபா பத்திரிகையாளர்கள் ஒன்றியம் (UPEC) சார்பில் மார்ச் 17 முதல் 19 வரை ஹவானாவில் நடைபெறவுள்ள “பத்ரியா” என்ற சர்வதேச ஊடகவியல் மாநாட்டில் பங்கேற்க எம்.கண்ணன் உள்ளிட்ட இந்திய இடதுசாரி பத்திரிகையாளர்கள் குழு கியூபா சென்றுள்ளது. மாநாட்டின் முக்கியத்துவம் இந்த சர்வதேச மாநாடு, பன்னாட்டு தொலைக்காட்சி அலைவரிசையான ‘டெலிசூர்’ ஊடகத்தின் 20வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக நடைபெறுகிறது. மேலும், லத்தீன் அமெரிக்க புரட்சி நாயகர் ஜோஸ் மார்ட்டி உருவாக்கிய ‘பத்ரியா’ இதழின் 133ஆம் ஆண்டு விழாவாகவும் இது நடைபெறுகிறது.
இணைய உலகில் சமூக ஊடாடல்களுக்கான புதிய வாய்ப்புகளும், அதே நேரத்தில் தவறான தகவல் பரப்புதல், வெறுப்புப் பேச்சு மற்றும் பல்வேறு கையாளுதல் வடிவங்கள் பற்றிய விவாதங்கள் இதில் இடம்பெறும். மாநாட்டின் முக்கிய தலைப்புகள் மாநாட்டில் விவாதிக்கப்படும் முக்கிய தலைப்புகள்:
1. மக்கள் எழுச்சி மற்றும் சமூக விடுதலையில் தொழில்நுட்பத்தின் பங்கு
2. தவறான தகவல்கள் மற்றும் டிஜிட்டல் கையாளுதல்: அவற்றை எதிர்கொள்ளும் உத்திகள்
3. அறிவாற்றல் போர்; மற்றும் சமூக மற்றும் அரசியல் கட்டுப்பாட்டு கருவிகள்
4. பெரிய தளங்களுக்கு மாற்றுகள்: சமூக வலைப்பின்னல்கள் மற்றும் பரவலாக்கப்பட்ட கருவிகள்
5. தொழில்நுட்ப-அரசியல் மற்றும் டிஜிட்டல் காலத்தில் மனித உரிமைகள்
6. விமர்சன டிஜிட்டல் கல்வி மற்றும் ஊடக எழுத்தறிவு
7. நம்பிக்கை உணர்வை உருவாக்குவதில் தொழில்நுட்ப-அரசியலின் பங்கு
8. செயற்கை நுண்ணறிவு மற்றும் தெற்காசிய நாடுகளில் அதன் (AI) பயன்பாட்டு அனுபவங்கள்
9. டிஜிட்டல் இறையாண்மை மற்றும் சுயேச்சையான தொழில்நுட்ப வளர்ச்சி
10. இணைக்கப்பட்ட உலகில் சாத்தியமான எதிர்காலம் இந்திய பத்திரிகையாளர் குழு இந்த மாநாட்டில் இந்திய இடதுசாரி பத்திரிகையாளர்கள் கலந்து கொள்கின்றனர். தேசாபிமானி ஆசிரியரும், மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயற்குழு உறுப்பினருமான புத்தலத்து தினேசன், கைரளி ஊடகத்தின் செய்தி ஆசிரியர் சரத் சுந்தர், தீக்கதிர் கோவை மற்றும் எண்ம பதிப்பு பொறுப்பாசிரியரும், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினருமான எம்.கண்ணன், பி. துளசிதாஸ் (ஆசிரியர், பிரஜாசக்தி), கே. ஸ்ரீனிவாச ரெட்டி (தலைவர், பிரஸ் அகாடமி - தெலுங்கானா), பாலசந்திர கொங்கோ (என்யூஜெட்), ராமகிருஷ்ண பாண்டா (சிபிஐ) ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக இவர்கள் ஹவானா சென்றுள்ளனர். கியூபா தூதரின் அழைப்பு முன்னதாக, இந்திய பத்திரிகையாளர்கள் குழு இந்தியாவிற்கான கியூபா தூதர் ஜூன் கார்லோஸை புதுதில்லியில் சந்தித்தது. இந்த சந்திப்பின் போது, அமெரிக்க பொருளாதாரத் தடை காரணமாக கியூபா மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், அவற்றை மீறி அவர்கள் போராடும் விதத்தையும் தூதர் விளக்கினார். கியூபா மக்களின் வாழ்க்கையை நேரில் கண்டு ஒற்றுமை காட்டுமாறு பத்திரிகையாளர் குழுவை அவர் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பின் போது, சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.அருண்குமார் உடனிருந்தார். இந்த சர்வதேச மாநாடு ஆதிக்க சக்திகளின் சேவையில் உள்ள தொழில்நுட்ப-அரசியல் மனித சமூகத்திற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராயும். அதேசமயம், டிஜிட்டல் தளங்கள் கூட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும், விடுதலை உத்திகளை உருவாக்குவதற்கும் வாய்ப்புகளை வழங்குவதை பற்றியும் விவாதிக்கப்படும். கியூபா பத்திரிகையாளர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்த சந்திப்பு, தகவல் தொடர்பாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொழில்நுட்ப-அரசியலால் ஏற்படும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து சிந்திக்க உதவும். மாநாட்டின் விவரங்கள் www.coloquiopatria.cu என்ற இணையதளத்தில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.