tamilnadu

img

தீண்டாமையின் அடையாளமான ‘காலனி’ என்ற சொல் நீக்கம்!

தீண்டாமையின் அடையாளமான ‘காலனி’ என்ற சொல் நீக்கம்!

முதல்வர் அறிவிப்பு

சென்னை, ஏப். 29 - “தமிழ்நாட்டில் தீண்டாமை யின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப் புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும்” என்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை (ஏப்.29) தமது துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதி லளித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசி னார். அப்போது, விசிக சட்டமன்ற உறுப்பினர் ம.  சிந்தனைச்செல்வன் வைத்த கோரிக்கை ஏற்றுப் பேசிய முதலமைச்சர், “இந்த மண்ணின் ஆதி குடி களை இழிவுபடுத்தும் அடையாளமாக ‘காலனி’ என்ற சொல் பதிவாகியிருக்கிறது. இந்தச் சொல், ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக் கான குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் மாறி இருப்பதால், இனி இந்த சொல்லை அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பதவி உயர்வில் இடஒதுக்கீடு

மேலும், “பட்டியலின மற்றும் பழங்குடி யினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரி விசிக தலைவர் தொல். திருமாவளவன் என்னிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும், நேரிலும் வலியுறுத்தினார்” என்பதை குறிப்பிட்ட முதலமைச்சர், “அதன் அடிப்படையிலும்-  பல்லாண்டு காலமாக தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தயாரிக்கப்பட்டு வந்த தரவரிசை பட்டியலானது, சமூக நீதி அடிப்ப டையில் இருந்து வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு வரப்பெற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக இந்த முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு- அதற்கான சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும்.  அந்த குழு அளிக்கக்கூடிய பரிந்துரையின் அடிப்படையில் இந்த தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து ஒரு நல்ல தீர்வு காணப்படும்”என்றார்.

காவல் ஆணையத்தின் 86 பரிந்துரைகள் அமலாக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் வி.பி. நாகை மாலி பேசும்போது, “காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்”  என்று கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.டி. செல்வம் தலைமையிலான ஐந்தாவது காவல் ஆணையம் 934 பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. அதில், 86 பரிந்துரைகள் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டன. மேலும் 274 பரிந்துரைகள், நடைமுறைப்படுத்தப்படுவதற்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன; மற்றவை அரசின் பரிசீலனையில் உள்ளன” என்று முதலமைச்சர் தெரிவித்தார்.