மதுரை:
ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குவதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.கீழடி அகழாய்வுப் பணிகளை திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கீழடியில் வெள்ளியன்று ஆய்வு செய்தார். அவருக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அகழாய்வுப் பணிகள் குறித்தும் இது வரை கண்டறிந்துள்ள பொருட்கள் குறித்த விவரங்களையும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-இந்தியாவின் வரலாறு குறித்த ஆய்வை தெற்கிலிருந்து தான் தொடங்கவேண்டுமென்று வரலாற்று ஆசிரியர்கள் கூறி வந்தனர். ஆனால், இப்போது இந்தியாவின் வரலாறு தமிழகத்திலிருந்து அதுவும் கீழடியிலிருந்து தொடங்கப்பட வேண்டுமென்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குகிறது. ஆய்வுப் பணியில் ஈடுபடும் தொல்லியல் துறைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசும்,மாநில அரசும் முழு கவனத்துடன் அகழாய்வை மேற்கொள்ளவேண்டும். கி.மு.6-ஆம் நூற்றாண்டில் தமிழர் நாகரீகம் எப்படியிருந்தது என்பது கீழடி ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. கீழடி தொல்லியல் ஆய்வுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும்.கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். கீழடியைப் போன்று தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் தொல்லியல் ஆய்வு தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மு.க.ஸ்டாலினுடன் திமுக துணைப்பொதுச் செயலாளர்ஐ.பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கம் தென்னரசு,பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, சரவணன், மதுரை மாநகர்மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, தளபதி, சிவகங்கை மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வந்திருந்தனர்.