tamilnadu

img

கடலூர் சிறுமி நன்முகை போட்ட விதை: சிறப்பு நிதி ஆயிரம் கோடி ரூபாயை கடந்தது

கடலூர் சிறுமி நன்முகை போட்ட விதை:  சிறப்பு நிதி ஆயிரம் கோடி ரூபாயை கடந்தது

கடலூர், நவ.14 - ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்விக்கான நிதி 2000 கோடி ரூபாயை நிறுத்தி வைத்தது. ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.  இந்த நிலையில் ஒன்றிய அரசு நிதியை நிறுத்தினால் என்ன நாங்கள் தருகிறோம் என்று கடலூரைச் சேர்ந்த டாக்டர் பால. கலைக்கோவன் -  டாக்டர் கிருஷ்ண பிரியா ஆகியோரின் மகள் எல்கேஜி படிக்கும் நன்முகை என்ற சிறுமி தான் சேமித்து வைத்திருந்த உண்டியலை உடைத்து பத்தாயிரம் ரூபாய் தமிழக முதலமைச்சருக்கு கல்வி நிதியாக முதன்முறையாக அனுப்பி வைத்தார்.  இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியை ஈடுசெய்வ தற்காக “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” என்ற பெயரில் நிதியை திரட்டுவதற்கு அறைகூவல் விடுத்தார். இதற்கான நிதி வழங்குவதில் கட லூரில் பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இயக்கமாகவே நடத்தினார்கள்.

 இந்த சிறப்பு நிதி தற்போது ஆயிரம் கோடி ரூபாயை கடந்துவிட்டது என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் கடலூர் நன்முகை என்ற சிறுமியையும் நினைவுபடுத்தி உள்ளார்.  அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முரசொலியில் எழுதிய கடிதத்தில் கடலூரைச் சேர்ந்த சிறுமி நன்முகை, ஒன்றிய அரசு நிதி தரலன்னா என்ன நான் தருகிறேன் என்று பத்தாயிரம் ரூபாய் காசோலையை அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார்.

இதுதான் தமிழ்நாடு. மக்களின் உணர்வு, இது இன்பத் தமிழ்நாடு, இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு, என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்கு உண்டு என்று அவர் தெரிவித்திருந்தார். சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்ப கடலூர் சிறுமி நன்முகை விதைத்த விதை தற்போது பெரிய விருட்சமாகி ஆலமரமாக வளர்ந்துள்ளது. அனைத்து தரப்பினரும் சிறுமிக்கு பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.  பிப்ரவரி மாதம் கடலூர் வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், சிறுமி நன்முகையை நேரில் அழைத்து பாராட்டினார்.  அதேபோல் வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம்,  கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழியும் பாராட்டை தெரிவித்து இருந்தனர். இதேபோல் பலதரப்பட்டவர்களும் சிறுமியின் செயலைப் பாராட்டிய நிலையில் தான் தமிழக அரசு திரட்டிய அந்த நிதி ஆயிரம் கோடி ரூபாய் கடந்துள்ளது.