அரளி கிராம மக்களின் அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி, நவ.14 - உளுந்தூர்பேட்டை அடுத்த பாண்டூர் ஊராட்சிக்குட்பட்ட அரளி கிராம ஆதி திராவிடர் மக்களின் அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கிளை செயலாளர் பி.மாணிக்கம் தலைமையில் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். ஒன்றிய செயலாளர் கே.ஆனந்தராஜ், மாவட்ட குழு டி.எஸ்.மோகன், ஒன்றிய குழு எம்.வீரன் ஆகியோர் விளக்கி பேசினர். ஒன்றிய குழு கே.சக்கர வர்த்தி, வி.ராஜி, கே.சிவக்குமார், ஆர்.அழகு நாதன், கே.பரிமளா, எஸ்.சுதாகர், எ.ஜெய லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுடுகாடு மற்றும் அதன் பாதை ஆக்கிர மிப்பை அகற்றி அளந்து அத்துகாட்ட வேண்டும், நூறு நாள் வேலை அட்டை வைத்திருப்பவர் அனைவருக்கும் கட்டாயம் வேலை வழங்கி சட்ட கூலி ரூ.336 உடனே தர வேண்டும், மாரியம்மன் கோவில் தெரு சகதியான பகுதிக்கு சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும், அரளி ஏரி கலங்கில் இருந்து உபரி நீர் வெளியேற ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி மராமத்து செய்ய வேண்டும், கோல்டன் சிட்டி நகர் பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும், அரளி கிழக்கு பகுதி மக்கள் பொதுப்பணித்துறை ஏரியில் இறந்தவர்களை புதைக்கும் அவல நிலையை முடிவுக்குக் கொண்டுவர மாற்று இடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. போராட்ட இடத்திற்கு வந்த திருநாவலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விண்ணரசி பேச்சு வார்த்தை நடத்தி, நூறு நாள் வேலையில் அனைவருக்கும் கட்டாயம் வேலை வழங்கப்படும் எனவும், மற்ற கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தார்.
