tamilnadu

பருத்திச்சேரி குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு அதிகாரிகளின் நடவடிக்கையால் பாடை கட்டும் போராட்டம் ஒத்திவைப்பு

பருத்திச்சேரி குடமுருட்டி ஆற்றின் குறுக்கே  கான்கிரீட் பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு அதிகாரிகளின் நடவடிக்கையால் பாடை கட்டும் போராட்டம் ஒத்திவைப்பு

கும்பகோணம், ஜூலை 8-  தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பருத்திச் சேரியில், குடமுருட்டி ஆற்றின் குறுக்கே மரப்பாலம் அமைக்கப்பட்டு மிகவும் பழுதடைந்த நிலையில், ஆபத்தான சூழ்நிலையில் அப்பகுதி மக்கள் அதை பயன்படுத்தி வந்தனர்.  இந்நிலையில் அந்த பழுதடைந்த மரப்பாலத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் அமைத்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில், சாலை மறியல், காத்திருப்புப் போராட்டம், ஆற்றில் இறங்கி போராட்டம் போன்ற பல கட்ட போராட்டங்களை நடத்தியது. அப்போது, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திட்டக் கோப்பினை அரசுக்குத் தெரிவித்து உத்தரவு பெற்ற பின்பு, அதற்கான பணி தொடங்கும் என தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, ஆற்றில் தண்ணீர் இல்லாதபோது, கோடை காலத்திலும் காங்கிரீட் பாலம் அமைக்காத நிலையில்,  பாலம் கட்டும் வரை சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் எழுத்து மூலம் போராட்ட நடத்திய சிபிஎம் தலைவர்களிடம் விரைவில் பாலம் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை அடுத்தும், இதுவரை எந்தவித பாலம் கட்டும் வேலையும் நடைபெறாததால் ஜூலை 8 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில், பொதுமக்களை திரட்டி மீண்டும் பருத்திச்சேரி விஏஓ அலுவலகத்திலிருந்து, நாச்சியார்கோவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வரை சுமார் 4 கிலோ மீட்டருக்கு பாடைகட்டி நூதன போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், கும்பகோணம் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை திங்களன்று நடைபெற்றது இந்த பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையான ஆரியசேரி, கூகூர், பருத்திச்சேரி கிராம மக்கள், மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் பருத்திச்சேரி அருகே, குடமுருட்டி ஆற்றில் பழுதடைந்த பழைய மரப்பாலத்தை அகற்றிவிட்டு ரூ.3 கோடியே 88 லட்சத்து 15,000 செலவில் புதிய காங்கிரீட் பாலம் அமைப்பதற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, வரும் செப்டம்பர் மாதம் வேலை துவங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்று, அதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தனர். இதனால் தற்காலிகமாக பாடைகட்டும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பேச்சு வர்த்தையில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பழனிவேல், பருத்திசேரி கிளைச் செயலாளர் வீரமணி, ஜோசப்ராஜா, ஆரோக்கியராஜ், பிரேமநாத், தருமையன், ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதனால், மக்களுக்கான போராட்டத்தில் என்றும் ஈடுபடும் சிபிஎம் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.