tamilnadu

img

அரவணைத்துக் கொள்!

அந்த ஐரோப்பாவை  ஆட்டிப்படைத்த பூதம் சென்னை வந்துவிட்டது போல, அலறுகிறார்கள்... மார்க்ஸ்!  அதுசரி... எதிரிகளின் அலறல் கேட்காமல் நீ எந்த நாளைக் கடந்திருக்கிறாய்? டிரியர் நகரத்தின் எதிரிகள் பார்த்து பான் பல்கலையின் எதிரிகள் கண்டு பிடறி மயிர் சிலிர்க்கச் சிலிர்க்க ஒரு இடிச்சிரிப்பு சிரிப்பாயே... அப்படி நகைத் திருப்பாய் தானே?!  நாட்டை விட்டே ஓடச்சொன்ன பாரீஸ் நகரத்தின் எதிரிகள் உன் காதலி ஜென்னியை விபச்சார விடுத்தியில் அடைத்த கொலோன் நகரத்தின் எதிரிகள் ராவோடு ராவாக  மூட்டை முடிச்சுகளோடு விரட்டிய பிரஸ்ஸல்ஸ் நகரத்தின் எதிரிகள் குளிரைத் தாங்கும் உன் கோட்டையும் பிடுங்கிக்கொண்ட லண்டன் நகரத்து எதிரிகள்!  உனக்கென்ன எதிரிகளுக்கா பஞ்சம்? கடனுக்காக தசையறிந்து கேட்ட ஷைலாக்குகளைப் படித்தவன் நீ! உலகின் மூலை முடுக்கெல்லாம் வரலாறெங்கிலும் குருதி வழிந்த கிரேக்க, ரோமானிய ஈட்டிகளையும் உள்வாங்கிய உன்மத்தன் நீ... இந்த நக்கிப் பிழைக்கும் ஞமலிகளை எதிரிகளென்று எண்ண இடமில்லை! சரி போகட்டும்.... போ!  ஆனால், ஒன்று சொல்வேன் மார்க்ஸ் இரவு விளக்குகளில் உன்னைக்காண பூதம் போலத்தான் தெரிகிறாய்... உன் பேரனுக்கே இப்படி என்றால் அந்தப் பேதைகளுக்கு எப்படித் தெரிவாய்?  பரவாயில்லை மார்க்ஸ்...உன்னை எங்களது காட்டுக் கருப்பாய் சுடலை ஏறி குடலுருவி ஆடும் மாடனாய் வெள்ளைக்குதிரை மீதேறி  வீச்சரிவாள் வீசி வரும் அய்யனாய் காத்தவராயனாய் முனியாண்டியாய் மாகாளி ருத்திரமாய் பராசக்தியாய் குலம் காக்கும் கொற்றவையாய்ப் பார்த்துக்கொள்வோம்....  நீ எங்களை மட்டும்... ஜென்னியைப் போல் காதலுடனும் ஏங்கெல்சைப் போல் நட்புடனும் லீப்னெஹ்னட்டைப்போல் தோழமையுடனும் ஹெகலைப் போல் பாயர்பேக்கைப்போல் ஆசிரியனாகவும் அரவணைத்துக்கொள்!