tamilnadu

img

ஊஞ்சல்! - கோவி.பால.முருகு

ஊஞ்சல்!  - கோவி.பால.முருகு

பள்ளி விடுமுறை நாள்களில் மாணவர்கள் பொழுது போக்குமிடம் அந்த ஊரின் ஐயனார் கோயில். தெருவிற்கு அருகிலேயே இருந்ததால் அங்கே அனைவரும் கூடுவார்கள்.அந்தக் கோயிலின் சிறப்பே அங்கிருக்கும் ஆலமரம்தான்.அடிப்பகுதி அகன்று கிளைகள் அந்தப்பகுதி முழுவதும் படர்ந்து அதிலிருந்து நூற்றுக்கணக்கான விழுதுகள் தொங்கும் காட்சியை வேறு எங்கும் காணமுடியாது.சில விழுதுகள் கீழிறங்கி தரையில் பதிந்து வேர்விடுவதும் உண்டு.கோயிலின் மூன்று பக்கமும் வயல்வெளிகள்.அவ்விழுதுகளில் சில உறுதியாக தொங்கும்.அதைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடுவது அவர்களின் விளையாட்டுகளில் ஒன்று. அங்கிருக்கும் பயமுறுத்தும் விழிகளோடு,கையில் பெரிய வீச்சரிவாளைத் தாங்கிக் கொண்டு, ஆஜானுபாகனாகக் காட்சிதரும் ஐயனாரை முன்பின் பார்க்காதவர்கள் பயந்துபோய் விடுவார்கள். ஐயனார் காலடியில் படுத்த நிலையில் இருக்கும் நாயை உண்மையான நாய் என்று எண்ணி பலர் ஏமாந்ததும் உண்டு.அதைச் சிமெண்டால் செய்து,வண்ணம் தீட்டியவர், பாரதியின் அப்பா ஜெயராமன் தான்.ஆசிரியராகப் பணியாற்றிய அவர் எல்லா கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்.இப்படிப் பார்ப்பதற்கே அஞ்சும்படியாக இருந்த ஐயனார் அந்த இளைஞர் கூட்டத்திற்கு உற்ற நண்பனாக இருந்தார். அவர்களுக்கு ஐயனார்மேல் எந்த பயமும் இல்லை.பெரியவர்கள் சிலர் “ஐயனார் நடு இரவிலும்,மதியம் ஒரு மணிக்கும் பாரி வேட்டைக்குப் போவார்.அப்போது எதிர்படுகிறவர்ளை அடித்துக் கொன்றுவிடுவார்”என்று சொல்லும் கதைகளை அவர்கள் நம்புவதில்லை.அதனாலேயே பகலிலும்,இரவிலும் அதுவும் முழுநிலா நாள்களில் அங்கே போய் இரவு பன்னிரெண்டு வரையிருந்து பேசியும் விளையாடியும் வருவார்கள். அந்த ஆலமரத்தின் விழுதுகள் ஊஞ்சலாட வசதியாக இருந்தாலும் ஒரிரு விழுதுகள் மட்டும் வலிமையாகவும் நீண்டும் இருந்தன.அய்யனாருக்கு எதிரில் இடது பக்கம் இருக்கும் முனீஸ்வரனுக்கு மட்டும் வளைவாக உயரம் குறைவான, சிறிய கோயில் கட்டியிருந்தார்கள். அதன் மேலே ஏறி நிற்க ஒருவன் தூரமாகத் தொங்கும் விழுதைப் பிடித்து இழுத்துவந்து மேலே நிற்பவனிடம் கொடுப்பான்.கொடுத்த விழுதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து ஒரு உதை உதைத்து ஆடுவார்கள் .அந்த விழுது கிட்டத்தட்ட அரை வட்ட வடிவிற்குச் சென்று திரும்பிவரும். அப்போது லாவகமாக முனீஸ்வரன் கோயிலின் மேலே நின்று கொள்வார்கள்,மீண்டும் மீண்டும் கை வலிக்கும் வரை ஊஞ்சலாட்டம்தான். அப்படி ஆடும்போது, மிக உயரமாகச் செல்வதற்காக, சிலர் தரைக்கு நேராக விழுது வரும்போது, தொங்குபவரைத் தொட்டு வேகமாகத் தள்ளிவிடுவார்கள். சிலர் மட்டுந்தான் நீண்ட தூரம் சென்று திரும்பும் அளவிற்கு ஆடுவார்கள்.மற்றவர்கள் குறைவான தூரம் செல்லும்படியாக ஆடுவார்கள். அப்படி ஊஞ்சலாடி மகிழ்ந்த நாளொன்றில்தான் இந்த நிகழ்வு நடந்தது.அன்றைக்கு எப்போதும்போல் ஊஞ்சலாட்டம் துவங்கியது.அரை வட்ட வடிவில் சென்று திரும்பும் சாகசக்காரன் கிருஷ்ணன்.முனீஸ்வரன் கோயில்மேல் ஒரே பாய்ச்சலில் ஏற விழுதைப் பிடித்துக் கிருஷ்ணனிடம் கொடுத்தான் செல்வராசு. இப்போது மிக அழுத்தமாகக் காலை உதைத்து ஆட ஆரம்பித்தான்.கீழே நின்ற சேகர் நடுவில் வரும்போது அவனை வேகமாகத் தள்ளிவிட்டான்.இப்போது செல்லும் உயரம் அதிகமாகிக் கொண்டே வந்தது.என்னவாயிற்றோ தெரியவில்லை.எப்போதும் எவ்வளவு உயரத்திற்குச் சென்று திரும்பினாலும் லாவகமாக கோயில் உச்சி வளைவில் நின்று கொள்பவன் இப்போது எதிர் திசையில் அரைவட்டத்தைத் தாண்டி மிக உயரத்திற்குச் செல்லும்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் கையை விட்டுவிட்டான்.அவனாக விட்டிருக்க மாட்டான் கை நழுவியிருக்கும்போல.  அவ்வளவுதான். அப்படியே நேராகப் பறந்து மேலே போனான். இருபதடி தூரத்திற்குமேல் சென்று, எதிரே இருக்கும் வயல்வெளியில் விழுந்தான்.கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துமுடிந்தது.எல்லோரும் பதறியடித்துக் கொண்டு வயலுக்கு ஓடினர்.     அவன் விழுந்த இடம் வயல்வெளி, நடவு செய்வதற்காக, உழுது, எருவிட்டு நீரைத் தேக்கி வைத்திருந்தார்கள்., விழுந்தவன், நீர் தேக்கப்பட்டிருந்த சேற்றிலே விழுந்ததால், வழுக்கிக் கொண்டு பத்தடி தூரத்திற்கு உடல் சென்றது. பயந்து ஓடிவந்தவர்கள் அருகில் வருவதற்குமுன் ஒன்றும் நடக்காததுபோல் எழுந்து நின்றான். அவன் உடல் முழுதும் சேறு. உடம்பில் ஒரு கீறல்கூட இல்லை.விழுந்த பயத்தினால் கொஞ்சம் நடுங்கிப் போயிருந்தான். எதிர்த் திசையில் வீழ்ந்ததால் சேற்றில் விழுந்து தப்பித்துக் கொண்டோம். இதுவே திரும்பி வரும்போது கை நழுவியிருந்தால் ஒன்று கோயிலின் மேலே மோதி உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். இல்லை அதையும் தாண்டி கீழே விழுந்திருந்தால் தரையில் விழுந்து பலத்த அடிபட்டிருக்கலாம்… ஏன் உயிருக்கும்கூட ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பதை நினைத்த போதுதான் அவனின் பயம் அதிகமாகியது. இப்போது எழுபது வயதாகும் கிருஷ்ணன் முன்பு தன் பிள்ளைகளுக்கும், இப்போது தன் பெயரப் பிள்ளைகளுக்கும் தான் பெற்ற மோசமான அந்த அனுபவத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.