ஜான்சிராணி தவறி விழுந்ததாக அமைச்சர் கூறியது தவறானது மாற்றுத்திறனாளிகள் சங்கம் மறுப்பு
சென்னை, பிப். 21 - சட்டப் பேரவையில் மாற்றுத் திறனாளி கள் போராட்டத்தின் போது நடைபெற்ற சம்ப வங்கள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அளித்த விளக்கத்திற்கு, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) மறுப்புத் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 19 அன்று சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ எம்.சின்னதுரை எழுப்பிய கேள்விக் குப் பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, “சங்கப் பொதுச் செயலாளர் ஜான்சிராணி யைக் காவல்துறையினர் தாக்கவில்லை, அவர்தான் தவறி விழுந்துவிட்டார்; காவல் துறையினர்தான் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர்” என்று கூறி யிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் வெளியிட் டுள்ள அறிக்கையில், “பிப்ரவரி 17 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது நள்ளிரவில் காவல்துறையினர் எங்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி இழுத்துச் சென்ற னர். அப்போது ஜான்சிராணியைத் தூக்கிய காவலர்கள் அவரை இரண்டு முறை கீழே போட்டனர். படிக்கட்டில் வைத்து இழுத்த னர். இதில் மயக்கமடைந்த அவருக்கு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவ மனையில் அனுமதித்தது சங்க நிர்வாகிகள் தானே தவிர, காவல்துறையினர் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “சம்பவத்தின் போது காவல் துறை அதிகாரிகள் தங்கள் பெயர்களை மறைத்துக் கொண்டு செயல்பட்டனர். ஜான்சி ராணி தானாகவே விழுந்தார் என அமைச்சர் கூறியது உண்மைக்குப் புறம்பானது. இதற்கான உரிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.