துணை வேந்தரை நியமிக்கும் ஆளுநரின் உத்தரவு செல்லாது!
கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கொச்சி, ஜுலை 14- கேரளத்தில் உள்ள பல்கலைக்கழ கங்களில் முன்னாள் ஆளுநர் ஆரிப் முகமது கான் தற்காலிக துணை வேந்தர்களை நியமித்தது செல்லாது எனவும், அரசு பரிந்துரைப்போரிலிருந்து மட்டுமே துணை வேந்தர் நியமனம் இருக்க வேண்டும் எனவும் கேரள உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஏற்கனவே உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த உத்தரவுக்கு எதிராக துணை வேந்தர்கள் சார்பில் கூடுதல் அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதன் மீது திங்களன்று (ஜுலை 14) இந்த உத்தரவை கேரள உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் மூலம் ஆளுநர் நியமனம் செய்த தற்காலிக துணை வேந்தர்கள் சிஸா தாமஸ், சிவபிரசாத் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அண்மைக் காலமாக கேரள ஆளுநர் பல்கலைக் கழகங்களை காவி மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையிலான அவரின் செயல்களுக்கு துணை வேந்தர்கள் உட்பட எவரும் துணை போகக்கூடாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் நிலைக்கு உரிய விதிகள் உள்ளன. அவற்றை அனைவரும் பின்பற்றினால் நமது பல்கலைக் கழகங்கள் தேசிய சர்வதேசிய அளவில் பெற்றுள்ள அங்கீகாரத்தை மேலும் உறுதிப்படுத்த முடியும்” என்றார்.