tamilnadu

img

விதைகள் சேமிப்போம்! - அருப்புக்கோட்டை செல்வம்

பட்டாம் பூச்சி பறந்து பறந்து
பூவில் தேன் குடிக்கும் - அது
மொட்டின் மீது அமர்ந்து அமர்ந்து
மகரந்தம் சேர்க்கும்!

பறவைக் கூட்டம் பறக்கும் போதே
எச்சம் இடுவதைப் பார்த்தாயா? - அதில்
மரங்கள் செடிகள் கொடிகள் எல்லாம்
வளரும் சேதி அறிவாயா?

வீட்டில் அம்மா காய்கள் நறுக்க
விதைகள் சில கிடைக்கும் - அதை
தோட்டம் தன்னில் புதைத்து வைக்க
விடைகள் சில கிடைக்கும்!

நூறு ஆயிரம் லட்சம் பேராய்
விதைகள் சேமிப்போம் - அதை
ஊருக்(கு) அப்பால் போகும் போது
ஓரத்தில் எறிந்திடுவோம்!

ஒவ்வொரு விதையிலும் செடிகள் மரங்கள்
விருட்சம் ஒளிந்திருக்கு - நாம்
ஒவ்வொரு வருமே முயலும் போது
உலகம் ஒளிர்ந்திருக்கு!