tamilnadu

img

அறிவியல் கதிர் - ரமணன்

2028இல் வெள்ளி கோளுக்கு விண்கலத்தை ஏவும் இஸ்ரோ 

நமது இஸ்ரோ நிறுவனம் வெள்ளி (venus) கோளுக்கு 2028ஆவது ஆண்டு ஒரு விண்கலத்தை ஏவ உள்ளது. ஏற்கனவே செவ்வாய் கோளுக்கு நாம் விண்கலத்தை ஏவியிருக்கிறோம். அது தொலைதூரத்தில் இருந்தாலும் அருகிலுள்ள வெள்ளி கோளுக்கு ஏவுவது சவாலான விசயம் என்கிறார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத். ஏனெனில் வளிமண்டல அழுத்தம் அங்கு பூமியிலுள்ளதைப் போல 100 மடங்கு அதிகம். இப்போதுள்ள ஏவுகலங்களுக்கு மாற்றாக அடுத்த தலைமுறை ஏவுகலத்தை இஸ்ரோ தயாரிப்பில் உள்ளது. ஆனால் அதற்கு ஏழு ஆண்டுகள் ஆகும் என்பதால் இப்போதுள்ள LVM3 (Launch Vehicle Mark3) ஏவுகலத்தையே பயன்படுத்தப் போவதாக அவர் கூறுகிறார். அமெரிக்காவில் சுனிதா வில்லியம்சை ஏற்றி சென்ற போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் பழுதானதால் அவர் திரும்புவது எட்டு மாதங்களுக்கு மேல் தாமதாமாகி உள்ளது. எனவே நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம் என்கிறார் சோம்நாத். ரசியா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகள் 2030இல் வெள்ளி கோளுக்கு விண்கலங்களை அனுப்ப உள்ளன. அதற்கு முன்னதாக இந்தியா 2028இல் ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளதாம். 

கடல்நீரை குடிநீராக்க  புதிய கருவி 

உலகில் 220 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. மக்கள் தொகை அதிகரிப்பு, அதிக குடிநீர் நுகர்வு ஆகியவை கடலோர மற்றும் தீவு நாடுகளில் மேலும் நெருக்கடியை கொடுக்கின்றன. இதற்கான தீர்வில், கடல்நீரை குடிநீராக்குவது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வழமையான கடல்நீர் மாற்றும் அமைப்புகள் சவ்வுகளின் வழியே தண்ணீரை பாய்ச்சி உப்பை பிரிக்கும் . இம்முறையில் ஆற்றல் அதிகம் தேவைப்படும். மேலும் இயந்திரத்தின் மேல்பரப்பில் உப்பு படிமானம் அதிகரித்து அடைப்புகள் ஏற்படும். ஆகவே அடிக்கடி பழுது பார்க்க வேண்டி வரும். இது தொடர்ச்சியான இயக்கத்திற்கு தடையாக இருக்கும். இப்போது சூரிய ஒளியை பயன்படுத்தும் புதிய திறன் வாய்ந்த இயந்திரத்தை வாட்டர்லூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். மரங்கள் நீரை வேரிலிருந்து இலைகளுக்கு அனுப்பும் முறையின் அடிப்படையில் புதிய கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தண்ணீர் ஆவியாக்கப்பட்டு பின் குளிர்விக்கப்படுகிறது. இதனால் உப்பு படிவது தவிர்க்கப்படுகிறது. முக்கியமாக சூரிய ஒளியின் 93% ஆற்றலை இது பயன்படும் சக்தியாக மாற்றுகிறது. ஒரு சதுர மீட்டர்பரப்பில் 20லிட்டர் நன்னீர் உண்டாக்கப்படுகிறது. இது ஒரு நபருக்கு ஐநா சபையின் வரையறுப்பின்படி தேவைப்படும் தண்ணீர் ஆகும். இந்தக் கருவியின் மேல்பரப்ப்பில் பாலிமர் பூசப்பட்ட நிக்கல் ஃபோம், மற்றும் வெப்பத்தை உள்வாங்கும் போலன் துகள்கள் ஆகியவை உள்ளன. இவை சூரிய ஒளியை உள்வாங்கி வெப்ப சக்தியாக மாற்றுகின்றன. பாலிமரின் மீது மெல்லிய கடல் நீர் படலம் சூடாகி மேல்நோக்கி செல்கிறது. கடல்நீர் ஆவியாகும்போது, உப்பு கீழ்நோக்கி செலுத்தப்படுகிறது. ஒரு நீச்சல் குளத்தில் தானாகவே சுத்தம் செய்யும் மறுபக்க அலசல் முறையை ஒத்தது. இதனால் தொடர்ச்சியாக கருவியை இயக்க முடிகிறது என்கிறார் வாட்டர்லூ பல்கலைக்கழக வேதிப் பொறியாளர் மைகேல் டாம். 

கார்பனை பிரிக்கும் பசால்ட் 

வளிமண்டலத்திலுள்ள கார்பனை பிரித்தெடுத்து சேமிக்க பல நூற்றாண்டுகள் ஆகும். ஆனால் பசால்ட் (basalt)எனப்படும் எரிமலைப் பாறையின் துகள்கள் மூலம் மழை நீரில் கலந்து வரும் கார்பன் டை ஆக்சைடை வேதி வினை மூலம் விரைவாக பிரிக்க முடியும் என்று ஒரு நிறுவனம் காட்டியுள்ளது. கார்பனை பிரித்தெடுப்பது மட்டுமல்லாமல் பசால்ட் தூள் தூவப்பட்டட நிலத்தில் பயிர்களும் செழிப்பாக வளர்கின்றனவாம். கால்நடைகளுக்கு தேவைப்படும் மேய்ச்சல் நிலமும் மேம்படுகிறதாம். புவி வெப்பமடைதலுக்கு காரணமான பசுமைக் குடில் வாயுக்களை வெளிவிடும் நிறுவனங்கள் அதற்கு ஈடாக கார்பன் கிரெடிட் புள்ளிகளை பிற நிறுவனங்களிடமிருந்து வாங்குகின்றன. எனவே இந்த திட்டத்திற்கும் அவை நிதி முதலீடு செய்கின்றன. குறிப்பாக பிரிட்டிஷ் ஏர்வேஸ், மைக்ரோசாஃப்ட், மெக்லாரென் ரேஸிங் போன்ற நிறுவனங்கல் இதில் முதலீடு செய்துள்ளன. இத்தகய பாறைகள் உலகெங்கும் காணப்படுவதால் அவற்றை பயன்படுத்தி கோடிக்கணக்கான டன் கார்பனை விரைவாக பிரிக்க முடியும் என்கிறார் இதை செயல்படுத்தும் நிறுவனமான அண்டூ(Undo) வின் அறிவியல் ஆய்வு இயக்குனர் சின்ரான் லியு. சாலைகள் போடுவதற்காக பாறைகளை உடைக்கும்போதும் இது துணைப்பொருளாக கிடைக்கிறதாம்.