தஞ்சையில் எல்.இ.டி திரையில் ஒளிபரப்பப்பட்ட
தமிழக நிதிநிலை அறிக்கை நேரலை
தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையை, வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த அறிக்கை, பேரவையில் தாக்கல் செய்யப்படும் நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் பொது இடங்களில் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியில் 100 இடங்களிலும், மற்ற 24 மாநகராட்சிகளில் 48 பகுதிகளிலும், 137 நகராட்சிகளில் 274 இடங்கள், பேரூராட்சிகளில் 425 இடங்களிலும் எல்.இ.டி திரையின் வழியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் நேரலை செய்யப்பட்டது. அந்த வகையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எல்.இ.டி திரையின் வழியாக பட்ஜெட் நேரலை செய்யப்பட்டது. இந்த நேரலையை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் மற்றும் பலர் பார்த்தனர். அதேபோல், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் காணும் வகையில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.