உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறை ஏற்புடையதல்ல! சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேட்டி
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு விவகாரம்
சென்னை, ஏப். 28 - “முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறை ஏற்புடையதல்ல!” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மாநி லச் செயலாளர் பெ. சண்முகம் கூறினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் செய்தியாளர்களின் கேள்வி களுக்கு பதிலளித்த பெ. சண்முகம், “மீன வர்கள், பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் ஆழ்கடலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்துவது கண்டனத்திற்குரியது. இத்தகைய திட்டங்களை செயல்படுத்தும் முன் கருத்துக் கேட்க வேண்டும், சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வருகிறோம்” என்றார். “கூட்டணி கட்சிகளுக்கு திமுக மரியாதை கொடுக்கவில்லை என்று டி. ஜெயக்குமா ருக்கு (அதிமுக) எப்படி தெரியும்? அதற்கான விளக்கத்தை, ஆதாரத்தை அவர் தான் தர வேண்டும். திமுகவுடன் தோழமைக் கட்சிகள் சந்திப்பு, நல்லுறவு நீடிக்கிறது” என்றார். “உச்ச நீதிமன்றத்தின் தலையீடு, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் க.பொன்முடி பேசியது உள்ளிட்ட காரணங்களால் தற்போதைய அமைச்சரவை மாற்றம் நடந்துள்ளது. அது இயல்பான நல்ல மாற்றம் என்று கருதுகிறேன். அமைச்சரவையை மாற்றம் செய்வது, அமைச்சராக யார் இருக்க வேண்டும் என்று முடிவுசெய்வது முதலமைச்சரின் தனிப்பட்ட உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. அமைச்சரவை என்பது கூட்டு செயல்பாட்டை உள்ளடக்கியது. அதேநேரத்தில், செந்தில் பாலாஜி ஜாமீன் தொடர வேண்டுமா? அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா? என்பதை ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சட்டப்படியான முறையில்தான் ஜாமீன் வழங்க வேண்டும். அவர் அமைச்சராக நீடிக்கிறாரா? இல்லையா? என்பதை பொறுத்துதான் ஜாமீன் வழங்கப்படும் என்ற உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறையை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை” என்றார்.