கரும்புதான் பிரச்சனையாம்..!
அண்மையில் நடந்த கூட்டமொன்றில், மிகப்பெரிய மருத்துவத்துறை சந்தையாக உத்தரப் பிரதேசம் மாறியுள்ளதாக அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் கூறியுள்ளார். அடுத்து நம்மைப்பற்றி ஏதாவது சொல்லப் போகிறாரோ என்று மருத்துவர்கள் எல்லாம் மிரண்டு போய் உட்கார்ந்திருக்கிறார்கள். இதேபோல் ஒருமுறை, கரும்பு சாப்பிடுவதால்தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று மருத்துவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார். இந்த முறை எதைச் சொல்லி அதிர்ச்சி தரப்போகிறார் என்று நினைத்துதான் மிரண்டு போயிருந்தார்களாம்.
அடேங்கப்பா, லூயி விட்டான்...
அண்மையில் முன்னாள் தளபதி நரவானேயின் புத்தகத்தைக் கண்டதும் ஒட்டுமொத்த பாஜகவே மக்களவையில் அலறியது. அமித்ஷாவுக்குப் பின்னால் இருந்த அனுராக் தாக்கூரும் எழுந்து நின்று கத்தினார். தனது பெல்ட் தெரிகிறது என்றுணர்ந்தவர், சட்டென்று அமர்ந்தார். கோட் பட்டனை மாட்டி பெல்ட்டை மறைத்து, மீண்டும் எழுந்தார். ஜெய் ஷாவைப் போலவே வாரிசு கோட்டாவில் கிரிக்கெட் நிர்வாகத்தில் நுழைந்து, அரசியலில் பதவியையும் அனுபவித்து வருகிறார். வேறொன்றுமில்லை, ஏழைத்தாய்களின் மகன்களான இவர்களில் ஒருவரான அனுராக் தாகுக்கூர் அணிந்திருந்த பெல்ட்டின் விலை ரூ.1.5 லட்சம்தான். லூயி விட்டான் நிறுவனத்தினுடையது. அது ஒரு பன்னாட்டு நிறுவனம். இவர்களின் சுதேசி பேசும் லட்சணம் இதுதான்.
ஆச்சரியம்தான், ஆனால் உண்மை...
பொதுவாக, தென் இந்திய மாநிலங்கள் வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி வகிப்பது வாடிக்கையானதாகும். ஆனால், கல்வியறிவின்மையில் முதலிடத்தில் இருப்பது ஆந்திரப்பிரதேசம்தான். முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துவது, தொழில்நுட்பத்தில் முன்னணி என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும் தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணி ஆட்சி, எழுத்தறிவில் கவனம் செலுத்துவதில்லை என்று கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டின் கணக்கின்படி, ஆந்திராவின் எழுத்தறிவு 72.6 விழுக்காடாகும். இந்திய மாநிலங்களில் கடைசி இடத்தில் உள்ளது.
உடையும் சாதனைகள்..
இளம் வயதிலேயே தேசிய அணியிலும், கிளப்பிலும் விளையாட வாய்ப்புகள் வந்துவிட்டதால், ஸ்பெயினைச் சேர்ந்த லமைன் யமால், பல சாதனைகளை உடைத்தெறிகிறார். பதின்பருவத்தில் பார்சிலோனா கிளப்புக்காக அதிக கோல் அடித்த சாதனை 116 ஆண்டுகளுக்குப் பிறகு இவரால் முறியிடிக்கப்பட்டிருக்கிறது. பாலினா அல்கன்டரா என்ற ஆட்டக்காரர் 19 வயதில் பார்சிலோனாவுக்காக 40வது கோலை அடித்திருந்தார். தற்போது லமைன் யமால் 18 ஆவது வயதில் சமன் செய்துள்ளார். இன்னும் ஓராண்டில் மேலும் பல கோல்களை அடித்து சாதனையை எளிதில் எட்டாத உயரத்திற்கு எடுத்துச் செல்லவிருக்கிறார்.
நிறம் குறைவுதான்..
அவமானங்களா.. நிறைய சந்தித்திருக்கிறேன். நான் கொஞ்சம் கலர் கம்மி. கும்பல்ல முன்வரிசைல நின்னோம்னா, பின்னாடி போய் நிக்கச்சொல்வாங்க. முன்வரிசைல நிக்கனும்னு வெறித்தனமா வேலை செஞ்சேன். “சிறை” பட நடிகை இஸ்மத் பானு.
