வ.உ.சி துறைமுகத்தில் முதல் நிலை அதிகாரிகள் நியமன தேர்வின் நம்பகத்தன்மையை துறைமுக இணை அமைச்சர் சாந்தனு தாகூர் உறுதி செய்திட வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"வ.உ.சி துறைமுக ஆணையம்: ஒருவர் கூட தேர்ச்சி இல்லையா?
முதல் நிலை அதிகாரிகள் நியமனத் தேர்வுகளில் - எழுத்து தேர்வு, நேர்காணல்கள் முடிந்த பின்னர் - ஒருவர் கூட தேர்வு பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட அலுவலர் தகுதி 1, உதவி செயல் பொறியாளர்கள் மெக்கானிக்கல், சிவில் ஆகிய பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் அவை. இத்தகைய அறிவிப்பு ஆச்சரியம் அளிப்பதுடன் தேர்வு முறைமை குறித்த கேள்விகளையும் எழுப்பி உள்ளன.
இதுகுறித்து துறைமுக இணை அமைச்சர் மாண்புமிகு சாந்தனு தாகூர் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன். இதுகுறித்து மேல்மட்ட ஆய்வு நடத்தி அதன் விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.