தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாணவர் சங்கம் முற்றுகைப் போராட்டம்
தஞ்சாவூர், ஜூலை 8- தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு, மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை. அரசுத் தரப்பில் இருந்து தங்களுக்கு வரவேண்டிய நிதி தாமதமாக வருவதாகக் கூறி, தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மறுத்து வருகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர், அண்ணா சாலை நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்துக்கு அருகிலிருந்து, ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்ற இந்திய மாணவர் சங்கத்தினர், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வாயிலில் முற்றுகையிட்டனர். அப்போது, அலுவலகத்துக்குள் செல்ல முயன்ற சங்கத்தினரை, காவல் துறையினர் தடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முற்றுகைப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வசந்த், மாவட்டச் செயலாளர் ஹரிஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 12 மாணவிகள் உள்ளிட்ட 47 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். திருச்சிராப்பள்ளி இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய் அன்று திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள பள்ளிக்கல்வி முதன்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு, மாநில இணைச்செயலாளர் ஜி.கே. மோகன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், காவ்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, மாணவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சூர்யா, மாவட்ட துணைச் செயலாளர் சுதேசனா மாவட்ட துணைத் தலைவர் அபி, அன்பு, திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் வைரவளவன், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ஆமோஸ், புறநகர் மாவட்டக் குழு உறுப்பினர் ராஜேஷ், அர்ஜுன் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தை சார்ந்த மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.