சிவகாசி, மே 21-சிவகாசி அருகே, பள்ளபட்டி சாலையில் தேங்கி கிடக்கும் மழை நீரை அகற்றிட சாலையை உயர்த்த வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காகித கப்பல்விட்டு நூதன போராட்டம் நடைபெற்றது. சிவகாசியிலிருந்து பள்ளபட்டி செல்லும் வழியில் உள்ளது விசாலாட்சி நகர். இப்பகுதி, நகராட்சி மற்றும்ஊராட்சி பகுதியின் எல்லையாக உள் ளது. இதனால், யார் இச்சாலையை பராமரிப்பது என்ற தாவாவில் இரு நிர்வாகங்களும் எதுவும் செய்யாமல் உள்ளன. இந்தநிலையில், சில நாட்களுக்குமுன்பு அப்பகுதியில் மழை பெய்தது.இதையடுத்து, பள்ளபட்டி ஊராட்சியும், சிவகாசி நகராட்சியும் இணையும்சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர்குளம் போல தேங்கி நின்றது. வழக்கம் போல, இரு நிர்வாகங்களும் அதை அகற்றிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இச்சாலை வழியாகத் தான், பள்ளபட்டி, முத்துராமலிங்கம் நகர், சிவகாந்தி நகர், விவேகானந்தர் காலனி, பத்திரகாளியம்மன் காலனி, சேனையார்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பொது மக்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர். அவ்வழியே இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள்,பலர், இப்பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். கனரக வாகனங்கள் வந்தால், சாலையோரத்தில் செல் வோர் மீது சேற்றை வாரி இறைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, செயல்படாத ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேங்கி கிடக்கும் மழை நீரில் காகிதக் கப்பல் விடும்போராட்டம் நடைபெற்றது. இதில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்நகர் செயலாளர் கே.முருகன், ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர். தகவலறிந்து விரைந்து வந்த ஊராட்சி நிர்வாகத்தினர் தேங்கி கிடக்கும் தண்ணீரை பின்பு அப்புறப்படுத்தினர். மேலும், உடனடியாக கிராவல் மண் கொட்டி, புதிய சாலையை உயர்த்தி அமைக்க நடவடிக்கை வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியினர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.