ஒளி பாய்ச்சி வழிகாட்டிய சிறப்பு மாநாடுகள் தெனாலி முதல் திருவனந்தபுரம் வரை - எம்.என்.எஸ். வெங்கட்டராமன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அமைப்புச் செயல் பாட்டில் கிளைகள் தொடங்கி, கட்சிக் காங்கிரஸ் வரை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கட்சியின் அமைப்பு மாநாடுகள் முக்கியமான நிகழ்வுகளாகும். இம் மாநாடுகளில் கடந்தகாலப் பணி களைப் பரிசீலித்து எதிர்கால இலக்குகளைத் தீர்மானிப்பதும், கட்சியின் நிர்வாக அமைப்பு தேர்வுகளும் நடைபெறும். தேச அளவில் நடைபெறும் மாநாட்டை கட்சிக் காங்கிரஸ் என அழைக்கிறோம். கட்சி காங்கிரஸ்களில் நடப்பு அரசியல், வர்க்க சூழலை எதிர்கொள்வதற்கான அரசியல் நடைமுறை உத்தி உருவாக்கப்படுகிறது. கட்சித்திட்டம் வரையறுத்துள்ள மக்கள் ஜன நாயகப் புரட்சியை வென்றெடுக்க, பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்ட அரசியல் நடை முறை உத்தி அவசியமாகும். 1943-ல் முதல் கட்சி காங்கிரஸ் மும்பை யில் கூடியது. 1964-ஆம் ஆண்டுக்கு இடைப் பட்ட காலத்தில் ஒன்றுபட்ட கட்சியின் ஆறு கட்சிக் காங்கிரஸ்கள் நடைபெற்றுள்ளன. அர சியல், தத்துவ, ஸ்தாபனக் கருத்து வேறுபாடுக ளால் ஒன்றுபட்ட கட்சியில் இயங்கமுடியாத சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 1964-ல் கொல்கத்தாவில் 7-வது கட்சி காங்கிரஸ் கூடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தது. வருகிற 2015 ஏப்ரல் 14-லிருந்து 19 வரையிலும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் 21-வது கட்சி காங்கிரஸ் நடைபெற உள்ளது. இவ்வாறு கட்சி காங்கிரஸ்களை குறிப்பிட்ட காலவரம்பில் நடத்திச் செல்லும்போது, சில குறிப்பிட்ட அரசியல், தத்துவ, ஸ்தாபன தேவை கள் எழுவதும் அதை விவாதிக்க வேண்டியதும் தவிர்க்க முடியாதது. அப்படிப்பட்ட தேவைக ளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இக்காலத்தில் நான்கு சிறப்பு கூடுகைகளை நடத்தியுள்ளது. 1964 ஜூலையில் தெனாலி கன்வென்ஷன் (ஆந்திரா), 1968- ஏப்ரலில் பர்துவான் பிளீனம் (மேற்குவங்கம்), 1978 டிசம்பரில் சால்கியா பிளீனம் (மேற்குவங்கம்), 2000 - அக்டோப ரில் திருவனந்தபுரம் சிறப்பு மாநாடு (கேரளா) ஆகியவை இந்த சிறப்புக் கூடுகைகளாகும். எந்தத் தேவைகளிலிருந்து இந்த சிறப்புக் கூடு கைகள் நடைபெற்றுள்ளன. அவைகளின் முக்கியத்துவம் என்ன என்பதைக் காணலாம்.
தெனாலி கன்வென்ஷன் (1964 ஜூலை 7-11)
உலகிலும், நாட்டிலும் நிலவுகிற திட்டவட்ட மான அரசியல், பொருளாதார, சமூக நிலை மைகளின் மீது மார்க்சிய-லெனினிய ஆய்வு முறையால் கட்சித்திட்டத்தை உருவாக்கி செயல் படுவது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடிப்படை யான நடைமுறையாகும். இந்திய நாட்டின் புரட்சிக்கட்டம் புரட்சியின் தன்மை, புரட்சியின் பாதை, அரசின் வர்க்கத்தன்மை, இந்தியாவில் உள்ள வர்க்கங்கள், இவற்றில் ஆளும் வர்க்கங்கள், அதனை முறியடிக்க திரட்ட வேண்டிய இதர வர்க்கங்க ளை கண்டறிவது, அவற்றை இணைத்து ஒருஅணியை உருவாக்குவது இந்த அணிக்கு தலைமை ஏற்கும் வர்க்கத்தை தீர்மானிப்பது ஆகியவை கட்சித்திட்டத்தில் வரையறை செய்யப்படவேண்டும். கட்சித்திட்டத்தின் கேந்திரப்பகுதியாகும் இது. இந்திய நாட்டின் பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றிபெற இந்த கேந்திர வரையறுப்புகள் மிகச்சரியானதாக இருக்கவேண்டும். மார்க் சிய-லெனினியத்தை சரியாக பொருத்தி ஆய்வு செய்வதன் மூலமே இதுசாத்தியம். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் நமது நாட்டிற்கான கட்சித்திட்டத்தை உருவாக்குவ தற்கான உட்கட்சி விவாதங்கள் 1954-ல் தொடங்கியது. இந்திய நிலைமைகளுக்கு மார்க்சிய-லெனினியத்தைப் பொருத்துவதில் ஆழமான கருத்து வேறுபாடுகள் எழுந்தன. தலைமையின் ஒரு பகுதியினர் வலதுசாரி திருத்தல்வாத மதிப்பீடுகளை முன்வைத்தனர். இதன் மீதான விவாதங்கள் தொடர்ந்த சூழ்நிலையில் 1956-ல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20-வது காங்கிரசில் மார்க்சிய-லெனினியத்தை உலக நிலைமைகளுக்கு பொருத்துவதில் வலதுசாரி திருத்தல்வாத நிலைபாடுகளை முன்வைத்தது. இது உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் தத்துவார்த்த விவாதங்களை எழுப்பியது. இந்திய கம்யூனி ஸ்ட் இயக்கத்தின் மீதும் தாக்கத்தை ஏற் படுத்தியது. ஏற்கனவே இந்திய நிலைமைகள் குறித்து கட்சிக்குள் நடந்துவந்த தத்துவார்த்த விவா தங்களின் ஒருபகுதியாக இதுவும் இணைந் தது. இக்காலகட்டத்தில், 1962-ல் இந்தியாவிற் கும் சீனாவிற்கும் எல்லைப்பிரச்சனையில் போர் நடந்தது. இப்பிரச்சனையில் போர் தீர் வல்ல, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண வேண்டுமென ஒன்றுபட்ட கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் ஒரு பகுதி தோழர்கள் வலியுறுத்தினர். இவ்வாறு வலியுறுத்திய 50 தேசிய கவுன்சில் உறுப்பி னர்கள் உட்பட 1,700க்கும் மேற்பட்ட கம்யூ னிஸ்ட் இயக்க ஊழியர்களை மத்திய காங்கி ரஸ் அரசு கைதுசெய்து பாதுகாப்புக் கைதி களாக சிறையில் அடைத்தது. இவர்களை விடுதலை செய்யக்கோரி இயக்கம் நடத்துவதற்கு அன்றைய தலைமை மறுத்தது. அதோடு அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபனப் பிரச்சனைகளில் வலது திருத்தல் வாதத்திற்கு எதிராக போராடியவர்களை கட்சியை விட்டு நீக்குவது, மாநிலக்குழுக்களை கலைப்பது என செயல்பட ஆரம்பித்தது. இவ்வாறு உள்கட்சி ஜனநாயகம் மறுத லிக்கப்பட்ட சூழலில் இனியும் ஒரு கட்சியில் இருந்து செயல்படமுடியாத நிலைக்கு தள்ளப் பட்ட 32 தோழர்கள் 1964 ஏப்ரல் 11-ல் தேசியக் கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். நாடு முழுவதும் சென்று கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சனைகளை விளக்கினர். அடுத்தகட்ட செயல்பாட்டை திட்டமிடுவதற்காக 1964 ஜூலையில் ஆந்திராவின் தெனாலி யில் கன்வென்ஷன் கூட்டப்பட்டது. இதில் தோழர் எம்.பசவபுன்னையா அவர்களை கன்வீனராகக் கொண்ட மத்திய அமைப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்திய நிலைமை களை ஆய்வு செய்து கட்சித் திட்டத்திற்கு வரைவு ஒன்றை தயாரிக்கவும், கட்சிக்கான அமைப்பு விதிகளுக்கான வரைவை உருவாக்கவும், இந்தியாவிற்கான உண்மையான கம்யூனி ஸ்ட் கட்சியை அமைக்க தயாரிப்புகளைச் செய்யவும் மத்திய அமைப்புக்குழுவிற்கு அதி காரம் அளிக்கப்பட்டது. கட்சிக்கான வரைவுத் திட்டம் நாடு முழுவதும் உட்கட்சி விவாதத்தி ற்கு சுற்றுக்கு விடப்பட்டு 1964 அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரையிலும் கொல்கத்தா வில் நடைபெற்ற 7-வது கட்சி காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வரலாற்றில் தெனாலி கன்வென்ஷன் மிக முக்கியமான முடிவுகளை எடுத்த நிகழ்வாக அமைந்தது.
பர்துவான் பிளீனம் (1968 ஏப்ரல் 5- 12)
1956-ல் நடைபெற்ற சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரசின் சர்வதேச நிலைமைகள் பற்றிய ஆய்வில் ஏகாதிபத்தியத் தின் வலுவை குறைமதிப்பீடு செய்தும்-சோச லிச முகாமின் வலுவை மிகை மதிப்பீடு செய் தும்- சமாதான சகவாழ்வு என்ற பெயரால் ஏகாதிபத்திய எதிர்ப்பின் கூர்மையை மழுங்கச் செய்தும், சமாதான வழியில் சோசலிச மாற்றம் மற்றும் முதலாளித்துவமற்ற பாதை என்பதை முன்வைத்து வர்க்கப் புரட்சிகளை நிராகரித்தும், பாட்டாளி வர்க்கத்தின் தலை மைப் பாத்திரத்தை கைவிடுவதுமான வலது சாரி திருத்தல்வாத மதிப்பீடுகள் முன்வைக்கப் பட்டன. மார்க்சிய-லெனினியத்தை திருத்தி நீர்த்துப்போக வைக்கும் செயலாக இது இருந்தது. இதைத்தொடர்ந்து உலக கம்யூனி ஸ்ட் இயக்கத்திற்குள் தத்துவார்த்த விவா தங்கள் எழுந்தன. அன்றைய கட்டத்தில் திருத்தல்வாதத்தை எதிர்த்து மற்றொரு பெரிய ஆளும்கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சரியான நிலை எடுத்து செயல்பட்டது. சோவியத் கட்சியின் இம் மதிப்பீடு களை விவாதிப்பதற்காக 1957 நவம்பரில் புரட்சிதின விழாவிற்காக மாஸ்கோவிற்கு சென்ற தருணத்தில் 12 ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தின. இந்த விழாவிற்கு வந்திருந்த இதர 64 சகோதரக் கட்சிகளோடு கருத்துப்பரிமாற்றங்க ளும் செய்துகொள்ளப்பட்டன. இம் மாநாட்டின் நிறைவாக ‘மாஸ்கோ பிரகடனம்’ எனும் அறிக் கை வெளியிடப்பட்டது. திருத்தல்வாதமே முதன்மை ஆபத்து என இந்த அறிக்கை மிகச்சரியாக குறிப்பிட்டது. இதைத் தொடர்ந்து 1960-ல் 81 கம்யூனி ஸ்ட் கட்சிகள் பங்கேற்ற சர்வதேச மாநாடு மாஸ்கோவில் நடைபெற்று மீண்டும் விவா தங்கள் நடந்தது. ஆனாலும் சோவியத் கட்சி ஏற்கனவே முன்வைத்த திருத்தல்வாதப் போக்கை கைவிடத் தயாராக இல்லை. ஒன்று பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் இது பாதிப்பை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் தத்துவார்த்த பிரச்சனை களில் சரியான நிலை எடுத்து செயல்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, 1964-ம் ஆண்டுக்குப் பின், இடது அதிதீவிரவாதப் போக்குகளை முன் வைத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனியே அமைக்கப்பட்டபின் இப்போக்குகள் கட்சிக்குள் தாக்கங்களை ஏற்படுத்தின. 7-வது கட்சிக் காங்கிரசில் கட்சித் திட்டத்தை நிறை வேற்ற வேண்டிய முக்கியப்பணி இருந்ததால் தத்துவார்த்தப் பிரச்சனைகளை சிறப்புக் கூடுகை ஒன்றை நடத்தி விவாதிப்பதென முடிவானது. இதன்படி 1968 ஏப்ரலில் பர்துவானில் பிளீனம் கூட்டப்பட்டது. முன்னதாக தத்து வார்த்தப் பிரச்சனைகள் பற்றிய, மத்தியக் குழு வின் வரைவு அறிக்கையின் மீது, நாடு முழுவ தும் உட்கட்சி விவாதங்கள் நடந்தன. உலகில் நிலவுகிற சமூக முரண்பாடுகள், சமாதான சகவாழ்வு, சமாதான வழியில் சமூக மாற்றம், முதலாளித்துவமற்ற பாதை, புரட்சியின் பாதை போன்ற தத்துவார்த்தப் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. சீனக் கட்சியின் இடது அதி தீவிரவாதப் போக்கை ஏற்று ஒருபகுதி தோழர் கள் கருத்துக்களை முன் வைத்தனர். பிளீ னம் வலது, இடது ஆகிய இரண்டு திரிபுகளை யும் நிராகரித்தது. உலகின் பெரிய கட்சிகளும் ஆளும் கட்சிகளுமான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி வலது திருத்தல்வாதத்தையும், சீன கம்யூ னிஸ்ட் கட்சி இடது அதி தீவிரவாதத்தையும் முன்வைத்து செயல்பட்ட நிலையில், உலகின் பல கட்சிகள் இவற்றின் செல்வாக்கிற்கு இரையாகின. இரண்டு கட்சிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக தாக்கி வந்த நிலையிலும், அது தத்துவார்த்தப் பிரச்சனை களின் மீது சுயேச்சையான நிலை எடுத்தது. சோவியத்தை சமூக ஏகாதிபத்தியம் என வர்ணித்த சீன கட்சியின் நிலையையும், சீனா சோசலிச நாடல்ல என்ற சோவியத் கட்சியின் நிலையையும் மார்க்சிஸ்ட் கட்சியின் பிளீனம் நிராகரித்தது. உலகின் அனைத்துக் கட்சிக ளுக்கும் தனது ஆவணத்தை அனுப்பியது. சில கட்சிகள் இந்த நிலைபாட்டை ஏற்று வர வேற்றன. உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் நடந்த தத்துவார்த்தப் போராட்டத்தில் பர்துவான் பிளீனம் உவத்தல் காய்தலின்றி, மார்க்சிய - லெனினியத்தை சரியாக உள் வாங்கி முக்கியமான பங்களிப்பைச் செய்த தென்றால் அது மிகையல்ல. சால்கியா பிளீனம் (1978, டிசம்பர் 27 -31) ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் அரசி யல், தத்துவ தளங்களில் வலது திருத்தல் வாதம் ஏற்படுத்திய பாதிப்புகள் கட்சி ஸ்தாப னத்தையும் விட்டுவைக்கவில்லை. 1958-ல் அமிர்தசரஸில் நடந்த 5-வது கட்சி காங்கிரசில் வெகுஜன கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவது என்ற கருத்து முன் வைக்கப்பட்டு கட்சியின் அமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. கட்சியின் புரட்சிகரத் தன்மை கைவிடப்பட்டது. இந்தியப் புரட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சியைப் புரட்சிகரத் தன்மை கொண்டதாக கட்டவேண்டிய தேவை யை உணர்ந்து 1967 நவம்பர் மாதம் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு ‘கட்சி ஸ்தாபன அமைப்பு - நமது கடமை கள்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. காலப்போக்கில் புதிய நிலைமைகளுடன் இணைந்து செயல்பட்டு கட்சி ஸ்தாபனத்தை விரிவுபடுத்த, வர்க்க வெகுஜன அமைப்பு களின் செயல்பாட்டிற்கு வழிகாட்ட, கட்சியின் புரட்சிகரத் தன்மையை வளர்த்தெடுக்க, கட்சி ஸ்தாபனம் குறித்து தனி விவாதம் தேவை யென 1978-ல் ஜலந்தரில் நடைபெற்ற 10-வது கட்சி காங்கிரஸ் முடிவு செய்தது. இந்த முடி விற்கிணங்க 1978 டிசம்பரில் சால்கியாவில் பிளீனம் கூட்டப்பட்டது. இந்தியப் புரட்சியை வென்றெடுக்க வெகு ஜன புரட்சிக் கட்சியைக் கட்டுவது, வர்க்க வெகு ஜன அமைப்புகளை சுயேச்சையாக, ஜனநாய கத் தன்மையில் செயல்படுத்துவது, கூட்டுத் தலைமையை அனைத்து மட்டங்களிலும் உருவாக்குவது, ஜனநாயக மத்தியத்துவத்தின் படி கட்சியை செயல்படுத்துவது, விமர்சனம்-சுயவிமர்சனத்தை வளர்த்தெடுப்பது, அனை த்து மட்ட கட்சி மையங்களை வலுப்படுத்து வது, செய்த பணிகளை பரிசீலித்து படிப்பினை களைக் கற்று முன்னேறுவது ஆகிய வழி காட்டல்களை இப்பிளீனம் உருவாக்கியது. கட்சி ஸ்தாபன செயல்பாட்டில் சால்கியா பிளீனத்தின் கோட்பாடுகளும், வழிகாட்டல்க ளும் மதிப்புமிக்கவையாக இன்றும் இருக் கின்றன என்பதை காணமுடிகிறது. ஸ்தாபன கோட்பாடுகளின் அடிப்படையில் கட்சியை செயல்படுத்த சால்கியா பிளீனத்தின் பங்களிப்பு மதிப்புமிக்கதாகும்.
திருவனந்தபுரம் சிறப்பு மாநாடு (2000, அக்டோபர் 20-23)
1990-களின் துவக்கத்தில் உலகில் இரண்டு அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தன. முதலாவதாக சோவியத் யூனியனில் சோச லிச சமூக அமைப்பு வீழ்ந்து அந்த நாடு சிதறி யது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோசலி சத்தைக் கைவிட்டன. ஒட்டுமொத்தமாக சோசலிச முகாம் பின்னடைவைச் சந்தித்தது. இதனால் உலகளவில் வர்க்க சக்திகளின் இடையுறவு ஏகாதிபத்தியத்திற்கு சாதகமாக மாறியது. இரண்டாவதாக, ஏகாதிபத்தியத்தின் தலை மையிலான உலக முதலாளித்துவம் தாராள மய பொருளாதாரக் கொள்கைகளை நடை முறைப்படுத்தியது. வளரும் நாடுகளின் பொருளாதாரத்தின் மீது பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியது. வளரும் நாடுகள் ஏகாதிபத்திய கட்டளைகளுக்கு அடிபணியத் தொடங்கின. இந்தியாவிலும் ஆளும் வர்க்க அரசுகள் தாரா ளமயப் பாதையில் பயணிக்கத் துவங்கின. இந்த இரண்டு முக்கிய விளைவுகளை மார்க்சிய-லெனினிய கண்ணோட்டத்தில் மதிப்பிட்டு கட்சித் திட்டத்தின் சர்வதேச-தேசியப் பகுதிகளை சமகாலப்படுத்த வேண்டுமென 1992-ல் சென்னையில் நடைபெற்ற கட்சி யின் 14-வது காங்கிரஸ் முடிவு செய்தது. இதன்படி மத்தியக்குழுவால் கட்சித் திட்டத்தை சமகாலப்படுத்துவதற்கான வரைவு தயாரிக் கப்பட்டு உட்கட்சி விவாதத்திற்காக கிளைகள் வரையிலும் சுற்றுக்கு விடப்பட்டது. விவாதங்க ளில் வந்த கருத்துக்களை தொகுத்து விவா தித்து இறுதிப்படுத்துவதற்காக 2000-ம் ஆண்டு அக்டோபரில் திருவனந்தபுரத்தில் கட்சியின் சிறப்பு மாநாடு கூட்டப்பட்டது. இப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி க்கு வழிகாட்டியாக விளங்கும் சமகாலப்படுத் தப்பட்ட கட்சித் திட்டத்தை உருவாக்கிய முக்கிய மாநாடாக இது திகழ்கிறது.