tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

கரூர் மாவட்டகாவலர்களுக்கு நீர்-மோர் வழங்கிய எஸ்.பி.,

கடும் வெயிலிலும் போக்குவரத்தை சரி செய்வதற்காக போக்குவரத்து காவல் துறையினர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளவும், கோடை காலத்தை முன்னிட்டும், கரூர் நகர உட்கோட்ட போக்குவரத்து காவலர்களுக்கு வெப்பத்தை குறைத்து, காற்றோட்டம் உள்ள தொப்பி, கருப்பு கண்ணாடி, மோர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா. பெரோஸ்கான் அப்துல்லா துவக்கி வைத்தார். தொடர்ந்து, போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, கருப்பு கண்ணாடி மற்றும் மோர், பழச்சாறு வழங்கினார். கரூர் லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் சாஹிராபானு, நந்தகோபால் மற்றும் கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராஜராஜன் பள்ளியில்  மாணவர்கள் படைப்பாற்றல் கண்காட்சி

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை - உடையநாடு ராஜராஜன் கல்வி நிறுவனத்தில், மாணவர்களின் படைப்பாற்றல்கள் திறன் விழா நடைபெற்றது.  ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீ.மனோகரன் கண்காட்சி அரங்கைத் திறந்து வைத்தார். பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் நீலகண்டன், பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத் தலைவர் வீரியன்கோட்டை ரமேஷ், பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.  கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் அனைத்தும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 10 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உருவாக்கிய படைப்புகளும், பறவைகள், விலங்குகள் உருவத்தோடு அமைக்கப்பட்டிருந்த நுழைவு வாயில்களும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன.