கவுகாத்தியில் இந்தியாவை ‘கலங்கடித்த’ தென் ஆப்பிரிக்கா - “தமிழ் சுதந்திரக் குழந்தை”
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்ற நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா கடுமையாக திணறியது. மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, தமிழ் பெயரைக் கொண்ட “செனுரன் முத்துசாமி” 109 ரன்கள் விளாசி தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் வலுவான ரன்கள் குவிக்க உதவினார். இவரால் தான் தென் ஆப்பிரிக்கா கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது என்று கூட கூறலாம். நம் நாட்டின் தமிழ் அடைமொழி பெயரைக் கொண்ட நபர், அதுவும் இந்தியாவிற்கு எதிராக அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளாரே, யார் இவர்? என்று இணையத்தில் ரசிகர்கள் அன்றைய தினமே தேட துவங்கிவிட்டனர். ஆனால் தென் ஆப்பிரிக்கர் என்று மட்டுமே தகவல் கிடைத்தது.
சிலர் செனுரன் முத்துசாமி தமிழ்நாட்டின் மயிலாடுதுறையை பூர்வீகமாக கொண்டவர் ; அவரது உறவினர்கள் இங்கே இருக்கிறார்கள் என அதிகாரப்பூர்வமற்ற தகவலை சமூகவலைத்தளங்கள் மூலம் கசியவிட்டனர். தாயின் பரபரப்பான பயணம் இத்தகைய சூழலில் “சுதந்திரக் குழந்தை” என்ற பெயரில் செனுரன் முத்துசாமியின் வரலாற்றை பரபரப்பான பயணம் மூலமாக, அவரது தாய் “வாணி மூடிலி” மிகவும் அழகாகவும், வறுமையில் மலர்ந்த வாழ்க்கை கண்ணோட்டத்துடன் ஒட்டுமொத்த உலகிற்கும் தெரியப்படுத்தியுள்ளார். கவுகாத்தி டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று (நவ., 22) செனுரனின் தாயார் வாணி மூடிலி ஆப்பிரிக்கா நாடான கானாவில் தொழில்முறை பயணத்தை முடித்துக் கொண்டு, தென் ஆப்பிரிக்கா நாட்டின் முக்கிய நகரான டர்பனுக்கு (இருப்பிடம்) வந்து கொண்டு இருந்தார். செனுரன் முத்துசாமி கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் சதத்தை நோக்கி மிக நன்றாக விளையாடி கொண்டு இருக்கிறார் என்ற தகவல் அவருக்கு கிடைக்கிறது
. தனது மகன் சதமடிக்கும் நிகழ்வை நேரடியாக காண வேண்டும் என்ற ஆசையில் அவசர அவசரமாக டர்பன் நோக்கி வருகிறார். இடையில் கவுகாத்தி டெஸ்ட் போட்டியை பார்க்க பல இடங்களில் முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவழியாக தனது மகன் சதத்தை எட்டிய போது, வாணி மூடிலி தன் வீட்டில் தொலைக்காட்சி முன்பு ஆனந்த கண்ணீருடன் கண்டுகளித்துள்ளார். சதமடித்து கொண்டாடும் தன் மகனின் புகைப்படத்தை வாட்ஸ் அப் முகப்பு படமாக மாற்றி, அதனுடன் “கவுகாத்தி மைதானத்தில் முதல் சதம் அடித்தவர்” என்ற குறிப்பையும் சேர்த்து, தற்போது அதனை அடிக்கடி தொடர்ச்சியாக கண்டு ரசித்து வருகிறார். சுதந்திரக் குழந்தை தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வந்த 1994ஆம் ஆண்டு செனுரன் பிறந்ததால் செனுரனை “சுதந்திரக் குழந்தை” என்று அழைக்கும் வாணி மூடிலி செய்தியாளரிடம் பேசுகையில்,”எனது மகன் செனுரன் சதத்தை காண வீட்டை நோக்கி நான் பைத்தியம் போல சாலைகளில் விரைந்து ஓடினேன். அதிர்ஷ்டவசமாக, அவன் சதமடிக்கும் நேரத்தில் வீட்டை அடைந்தேன். அவன் சதம் அடித்ததை பார்த்தது எனக்கு மிகுந்த மகிழ்வை அளிக்கிறது. எங்கள் முன்னோர்கள் 1900-களின் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் வேலூரில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக தென் ஆப்பிரிக்காவிற்கு வந்தனர்.
என் தந்தை வழி தாத்தா ஆப்பிரிக்காவுக்கு வந்த கப்பல்களில் ஒன்றில் கள்ளப்பயணியாக வந்தவர். நான் தாங்கமுடியாத நிறவெறி மற்றும் சமூக கட்டுப்பாடு கொந்தளித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் பிறந்தேன். தனிமைப்படுத்தப்பட்ட காலனிகளில் நாங்கள் வளர்க்கப்பட்டோம். பல்கலைக்கழகத்திற்குச் செல்ல என்னால் முடியவில்லை. படிப்பிற்கு கூட முழுநேரமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் இளம் ஆர்வலராக, அந்த கட்டுப்பாடு எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது” என அவர் கூறினார். பள்ளி கட்ட முயற்சி ஞாயிற்றுக்கிழமைகளிலும் தனது தாத்தா வேலை செய்ததையும், சமூகத்தில் ஒரு பள்ளியைக் கட்டுவதற்காக அரசாங்கத்திற்கு பணம் கொடுத்ததையும் நினைவு கூரும் வாணி,”செனுரனின் தந்தை வழி தாத்தா புன்னடாம்பரன் முத்துசாமியும் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். ஆனால் நிறவெறி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக அவரால் மேலே செல்ல முடியவில்லை. ஆனால் என் மகனின் காலத்தில் விஷயங்கள் மாறின. அவன் ஒரு பல்கலாச்சார சமூகத்தில் பிறந்தான். கிரிக்கெட்டின் விதைகளை அவனுக்குள் நடுவதற்கு அவரது தாத்தா மற்றும் தந்தை இருந்தார்கள். கிரிக்கெட் ஆர்வலரான அவரது தந்தையுடன் செனுரனின் கிரிக்கெட் உருவாக்கம் தொடங்கியது. ஆனால் திடீரென எனது கணவர் செனுரனுக்கு 11 வயதாக இருந்தபோது காலமானார். அவன் நிற்கக் கற்றுக் கொண்ட நேரத்திலிருந்து, முழு உடையணிந்து, அடிப்படையில் அவரது அப்பாவிடமிருந்து பந்து வீச்சு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தான்.
இது அவர் இறக்கும் வரை தொடர்ந்தது. அதன்பின் கணவரைப் போல பந்து வீச்சு பயிற்சிகளை தொடர்ந்து கொடுக்க, நானும் கிரிக்கெட் அறிவைப் பெற வேண்டியிருந்தது. நான் பயிற்சி அளித்த அந்த நீண்ட மணி நேரங்கள் அவனுக்கு சாதிக்க உதவியது. அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஒரு நாள் தொடருக்கு செனுரன் தென் ஆப்பிரிக்க அணியில் தேர்வானால், நானும் அவருடன் இணைவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். 1998இல் என் சகோதரியுடனும், பின்னர் 2019இல் செனுரனின் டெஸ்ட் அறிமுக போட்டியின் போதும், எங்கள் பூர்வீகத்திற்கு (இந்தியா) நான் இதுவரை இரண்டு முறை மட்டுமே சென்றிருக்கிறேன். இந்தியாவுடனான தன் தொடர்பு இன்னும் அப்படியே உள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்க ஜெர்சியில் உள்ள புரோட்டீஸ் சின்னத்தைப் (தென் ஆப்பிரிக்கா சின்னம்) பற்றி மகனும் நானும் மிகவும் பெருமைப்படுகிறோம். இதுதான் எங்களுக்குத் தெரிந்த ஒரே நாடு (தென் ஆப்பிரிக்கா). நாங்கள் இந்தியாவுக்குச் சென்றால், நாங்கள் வேறுபட்டு நிற்கிறோம். அங்கு சொந்தம் போன்ற உணர்வை எங்களால் அனுபவிக்க முடியவில்லை. ஆனாலும் தென் ஆப்பிரிக்க தேசிய சின்னமான புரோட்டீஸை அணிவது எங்களுக்கு மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் தருகிறது” என வாணி தெரிவிக்கிறார். நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - தில்லி பதிப்பு... தமிழில் : எம்.சதீஸ்குமார்
