tamilnadu

img

சூனா - பானாவுக்கு இ-பாஸ் கொடுத்த தமிழக அரசு....

மதுரை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர் (32 வயது) திருமண நிகழ்ச்சிக்காக தனது இருப்பிடத்திலிருந்து டிஎன் 01 எக்ஸ் 0000 (TN 01 x 0000) என்ற வாகனத்தின் மூலம் மதுரை செல்ல இ - பாஸ் விண்ணப்பத்துள்ளார். அந்த நபர் அளித்தது உண்மையான முகவிரியோ? போலியான முகவரியோ? தெரியவில்லை. ஆனால் விண்ணப்பதாரரின் பெயரை  கண்ணாத்தாள் படத்தில் வடிவேலு நடித்துள்ள சூனா - பானா என்ற பெயரில் இ - பாஸ் விண்ணப்பித்துள்ளார். குறிப்பாக தனது ஆதார், தொலைபேசி விபரங்களுடன் தந்தையின் பெயர் "சங்கி மங்கி" என்ற விபரத்துடன் விண்ணப்பித்துள்ளார். 

தமிழக அரசின் அனைவருக்கும் (தானியங்கி)  இ - பாஸ் திட்டத்தின் மூலம் சூனா - பானாவின்  விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு உடனடியாக இ - பாஸ் வழங்கப்பட்டுள்ளது.  இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மதுரை மாவட்ட காவல்துறையினர் இ - பாஸ் சோதனை செய்து மாவட்டத்திற்குள் அனுமதித்துள்ளனர்..  இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியாக தமிழக அரசின் இ - பாஸ் புதிய திட்டம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

சூனா - பானா வேடம்...    
சமூக வலைதளத்தில் பகிரப்படும் அனைத்து தகவல், மீம்ஸ்களுக்கு நாயகனாக வலம் வரும் நகைச்சுவை நடிகர் வடிவேல், நடிகர் கரண்,  நடிகை நீனா நடித்துள்ள படம் கண்ணாத்தாள். இந்து கடவுள் பற்றிய இந்த படத்தை இயக்குனர் பாரதி கண்ணன் இயக்கியுள்ளார். அன்றைய காலகட்டத்தில் ஹிட் அடித்த இந்த படத்தில் நகைசுவை நடிகர் வடிவேலு சூனா  - பானா (சுப்பையா பாண்டியன் )என்ற வேடத்தில் வேலைக்குச் செல்லாமல் உள்ளூர் தாதா போல ஏமாற்றல், திருட்டுத் தொழில் மூலம் படத்தில் நகைச்சுவையை பிரதிபலிப்பார். அதாவது லோக்கல் ரவுடியைப் போல நடித்திருப்பார். 

தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த சூனா - பானா வேடத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் செய்து கொண்டாடுவது வழக்கம். இந்த பெயரை வைத்து தான் திருப்பூர் நபர் இ - பாஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.