சிங்கப்பூர் சிட்டி, டிச. 12- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூர் நாட்டின் தலைநகர் சிங்கப்பூர் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் (32) - இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழ்நாட்டின் குகேஷ் தொம்மராஜா (18) மோதினர். 14 சுற்று களாக நடைபெறும் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 13 சுற்று முடிவில் டிங் லிரென், குகேஷ் ஆகியோர் தலா 6.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை கடைசி மற்றும் 14ஆவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. யாருக்கு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் என்பதை நிர்ணயிக்கக் கூடிய ஆட்டம் என்பதால் 14ஆவது சுற்று ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்றது. வெள்ளை நிற காய்களுடன் சீனாவின் டிங் லிரன் விளையாடிய நிலையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார் குகேஷ். இருவரும் ரிவர்ஸ்ட் க்ரன்ஃபெல்ட் திட்டத்துடன் ஆட்டத்தை தொடங்கினர். 13ஆவது தவறான நகர்த்தலால் குகேஷுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் அடுத்தடுத்த நகர்த்தலில் குகேஷ் சுதாரித்து கொண்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 51ஆவது நகர்த்தலில் ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்தது. ஆனால் 55ஆவது நகர்த்தலில் லிரென் திடீரென மிகப்பெரிய தவறை செய்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட குகேஷ் 58ஆவது நகர்த்தலில் டிங் லிரெனுக்கு செக் வைத்து, உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார்.
வரலாறு படைத்த குகேஷ்
மிக இளம்வயதில் (18 வயதில்) உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார் தமிழ்நாட்டின் குகேஷ். இதற்கு முன்பு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் 22 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை 18 ஆண்டுகள், 8 மாதங்கள், 14 நாட்களே ஆன தமிழ்நாட்டின் குகேஷ் முறியடித்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்துக்கு பின் குகேஷ் வென்றிருப்பதை ரசிகர்கள் வாழ்த்துக்களுடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். ரூ.11.45 கோடி பரிசுத்தொகை சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு ரூ.11.45 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த லிரெனுக்கு ரூ.9.75 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என சர்வதேச செஸ் சம்மேளனம் அறிவித்தது.
கனவு நனவாகியது ; குகேஷ்
வெற்றி பெற்றவுடன் குகேஷ் ஆனந்த கண்ணீருடன் இரு கைகளை உயர்த்தி,”நான் சாம்பியன்” என்று கூறினார். தொடர்ந்து குகேஷ் பேசுகையில்,”2017ஆம் ஆண்டு செஸ் விளையாடிக் கொண்டிருந்த போது உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் இளம் வீரராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தற்போது இந்த வெற்றியின் மூலமாக கனவு நனவாகியுள்ளது. அதேபோல் 2013ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை கண்ணாடி அறைக்கு வெளியில் நின்று பார்த்தேன். இன்று உலக சாம்பியன் பட்டத்துடன் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போட்டிக்கு உடல் ரீதியாக மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராகி வந்தேன். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிடம் இருந்து சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. 2 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இது அமைந்துள்ளது. அதேபோல் டிங் லிரன் செய்த தவறை உணர்ந்த அந்த நொடி, வாழ்வின் சிறந்த தருணம்” என அவர் தெரிவித்தார்.