மதுரை:
மதுரை திருமங்கலம் அருகேயுள்ள சொக்கநாதன்பட்டி புதூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்துக்கு அருகே புளியங்குளம் கிராமம் உள்ளது புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் மது அருந்திவிட்டு தங்களது கிராமத்திற்கு வந்து பெண்களையும் வயதானவர்களையும் மிரட்டுவதாகவும் இதுகுறித்து தட்டிக்கேட்டால் மதுபோதையில் ஆயுதங்களைக் கொண்டு தங்களைத் தாக்க வருவதாகவும் பெண்களைக் கேலி செய்வதாகவும் மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வியாழக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
தலைசுற்றும் அதிகாரிகள்
குறிப்பாக மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் நகர் காவல் நிலையம் முக்கியமானது. தினம்தோறும் குறைந்தது 50 பேர் ஏதாவது பிரச்சனைக்காக காவல்நிலையம் வருகின்றனர். இங்கு போதுமான காவல்துறை சார்பு ஆய்வாளர்கள், ஆய்வாளர் இல்லையெனக்கூறப்படுகிறது. ஒரு சார்பு ஆய்வாளர் அல்லது இருவர் எந்த புகாரை விசாரிப்பது, அல்லது எந்தப் புகாரை விசாரித்தோம். எதற்காக ஆட்களை அழைத்துவரச்சொன்னோம் எனத் தெரியாமல் காலை பத்துமணிக்குள்ளே தலை சுற்றி நிற்கின்றனர். பரிந்துரையின் பேரில் செல்பவர்கள் விசாரிக்கப்பட்டு பிரச்சனை தீர்க்கப்படுகிறது. சாமானியர்கள் சென்றால் நாள் முழுவதும் காவல்நிலையத்தில் காத்திருக்க வேண்டியது தான் என்கின்றனர். அடிக்கடி காவல்நிலையம் சென்று வரும் சமூக ஆர்வலர்கள்.காவல்துறை கண்காணிப்பாளர் திருமங்கலம் நகர் காவல்நிலையத்திற்கு கூடுதலாக விசாரணை அதிகாரிகளை நியமித்து வீண் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.