tamilnadu

img

அறிவியல் கதிர் - ரமணன்

அறிவியல் கதிர்

ஆண் காதலும் பெண் காதலும்  

இதயத் துடிப்பை அதிகப்படுத்தும், வயிற்றில் பட்டாம்பூச்சிகள் படபடக்கும் காதல் என்கிற உணர்வில் பெண்களை விட ஆண்கள் விரைவாக வீழ்ந்துவிடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் மனிதவியலாளர் ஆடம் போட் நடத்திய ஆய்வில் ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 நாட்டிலுள்ள 808 நபர்களின் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. 18இலிருந்து 25 வயதுக்கு உட்பட்ட இவர்கள் அனைவருமே தாங்கள் காதல் வயப்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ளார்கள். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்களிடம் எப்போது காதல் வசப்பட்டார்கள், எவ்வளவு தீவிரமாக காதலித்தார்கள், எத்தனை முறை காதலில் விழுந்தார்கள், காதலரின் மீது எவ்வளவு தூரம் பித்தாக இருந்தார்கள் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. கிடைத்த தரவுகளை பகுப்பாய்வு செய்தபோது சராசரியாக ஆண்கள் பெண்களைவிட ஒரு மாதம் முன்பாகவே காதல் வசப்படுவது காணப்பட்டது. ஒரு இணையரை கவர வேண்டும் என்கிற அழுத்தம் ஆண்கள் மீது அதிகம் இருப்பதால் இவ்வாறு நிகழலாம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.  மேலும் ஆண்கள் பெண்களைவிட அதிக முறை காதலில் விழுகிறார்கள்; ஆனால் சற்று குறைவாக உறுதிப்பாடு கொண்டவர்கள்; பெண்கள் தங்கள் இணையர் குறித்து அதிக நேரம் ஒரே நினைவாக சிந்திக்கிறார்கள்; ஆண்களைவிட சற்று தீவிர காதல் வயப்பட்டவர்களாக உள்ளார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.  தங்களுக்குள் உள்ள உறவை முறைப்படுத்துவதற்குள்ளாகவே 30% ஆண்கள் காதல் வசப்படுகிறார்கள்; ஆனால் பெண்கள் 20% பேரே அவ்வாறு ஆகிறார்கள். பல்வேறு கலாச்சார மாதிரிகளை பயன்படுத்தி ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே அரும்பும் காதல் குறித்த முதல் ஆய்வு இது; காதலில் சில அம்சங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சற்று வேறுபாடு உள்ளது என்பதை உறுதியான ஆதாரங்களுடன் காட்டியது என்கிறார் போட். பால் சமத்துவம் தொடர்பான சில சுவையான விஷயங்களும் வெளிவந்துள்ளன. பொதுவாக சொல்வதென்றால் பால் சமத்துவம் அதிகம் உள்ள நாடுகளில் காதலில் விழுவது, உறுதிப்பாடு, இணையர் குறித்த அதே சிந்தனையாக இருப்பது ஆகியவை குறைவாக காணப்படுகின்றன. நமது இனத்தை விருத்தி செய்யவும் ஒரு இணையை தேர்வு செய்யவும் பரிணாம வளர்ச்சி கொடுக்கும் அழுத்தத்துடன் சமூக ஒழுங்குகளும் நமது காதல் உணர்வில் தாக்கம் செலுத்துகின்றன என்பதை இது சுட்டுகிறது. ‘குடும்பம், காதல் உணர்வு உருவாவது, கலாச்சாரத்தில் அதன் தாக்கம், உலகளாவிய அதன் பொதுத் தன்மை ஆகிய முக்கிய விஷயங்களின் அடிப்படையான காவியக் காதல் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதை மேலும் ஆய்வு செய்து மக்கள் அதை புரிந்து கொள்ள உதவ விரும்புகிறோம்.’ என்கிறார் போட். இந்த ஆய்வு பயாலஜி ஆப் செக்ஸ் டிபெரென்ஸஸ் என்கிற இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலெர்ட் கூறுகிறது.

கிருமியை எதிர்க்கும்  சரும பூஞ்சை

 ஸ்டபைலோகாக்கஸ் அவேரஸ் (Staphylococcus aureus) எனும் மிக ஆபத்தான கிருமி உலகளவில் இலட்சக்கணக்கான மரணங்களை விளைவிக்கிறது. ஆனால் அதை அழிக்கும் ஒரு இயற்கையான ஈஸ்ட் (Malassezia sympodialis) நம் சருமத்திலேயே உள்ளது என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூஞ்சை நமது தோலிலுள்ள எண்ணெய் மற்றும் கொழுப்பை அகற்றுவதுடன் அது சுரக்கும் ஒரு அமிலம் கிருமி தொற்று உண்டாவதையும் வளர்வதையும் தடுக்கிறதாம்.  எஸ்.அவேரஸ் நமது சருமத்திலுள்ள உயிரிக் கூட்டத்தில் ஒன்றுதான். ஆனால் அது அதிகம் வளர்ந்தால் அல்லது நமது இரத்த ஓட்டத்தில் கலந்தால் ஆபத்தான தொற்றுகளை உண்டாக்குகிறதாம். இந்தக் கிருமி இப்போதுள்ள உயிரி எதிர்ப்பு மருந்துகள் எல்லாவாற்றிற்கும் தாக்குப் பிடிக்கும் சக்தியை பெற்றுள்ளது. ஆகவே புதிய மருந்துகள் கண்டுபிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக நமது சருமத்திலேயே உள்ள உயிரிப் பாதுகாப்பை மேலும் ஆய்வு செய்வது சரியாக இருக்கும்.  ‘நாங்கள் கண்டுபிடித்த வேதிப் பொருள் ஏற்கனவே அறியப்பட்டதும் ஆராயப்பட்டதும்தான். ஆனால் அது சாதாரண சோதனைச் சாலை நிலையில் கிருமி எதிர்ப்புத் தன்மையை வெளிப்படுத்துவதில்லை. நமது சருமம் போன்ற குறைந்த பிஹெச்(pH) சூழலிலேயே அது செயல்படுகிறது.’ என்கிறார் ஆய்வின் முதன்மை ஆசிரியரும் ஒரேகான் பல்கலைக்கழக உயிரியல் பரிணாமயிலாளருமான கைடிலின் கவாலாஸ்கி. எம்.சிம்போடையாலிஸ் பூஞ்சையானது இரண்டு மணி நேரத்தில் எஸ்.அவேரஸ் பேக்டீரியாவை செயலிழக்கச் செய்தது. ஆனால் காலப்போக்கில் மருந்துகளுக்கு எதிர்ப்பை உண்டாக்கிக் கொண்டது போல பூஞ்சைக்கும் எதிர்ப்பை வளர்த்துக் கொண்டது.  ‘பாலூட்டிகளின் சருமத்தில் பரவலாக காணப்படும் இந்த பேக்டீரியா மற்ற நுண்ணுயிரிகளுடன் வினைபுரிவது தொடர்பான மேலோட்டமான ஆய்வே தொடங்கியுள்ளது’ என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். மருந்துகளுக்கு எதிர்ப்பை உருவாக்கிக் கொள்ளும் ஸ்டபைலோ கிருமியின் மரபணு இயக்கத்தை இன்னும் ஆழமாக ஆய்வு செய்யப் போவதாகவும் கூறுகிறார்கள். இந்த ஆய்வு கரண்ட் பயாலஜி எனும் இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் தெரிவிக்கிறது.

சமையலறை அறிவியல்

 அடுப்பில் பதார்த்தங்கள் கொதித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கணம் நமது கவனம் வேறு பக்கம் செல்லும்போது பொங்கி வழிவதை பார்க்கிறோம். கொதிக்கும் திரவங்கள் சட்டென்று பொங்கிவிடும். அரிசி, பாஸ்தா, பால் போன்றவையே பக்கவாட்டில் வழிகின்றன. கனமான பொருட்கள் பொங்குவது சற்று குறைவு. இதற்கு ஒரு கரண்டியை குறுக்கே போட்டுவைப்பது தீர்வு என்று கூறுவார்கள். ஆனால் இது நீண்ட நேரத்திற்கு சரியாகாது. பொங்கி வழிவதை தடுப்பதில் பல நுணுக்கங்கள் உள்ளதாம்.  தண்ணீர் மட்டும் இருந்தால் பொங்கி வழிவதில்லை. சமைக்கும் உணவுகளில் பிரதானமாக இருப்பவை தண்ணீர், மாவுச் சத்து (கார்போஹைடிரேட்), புரதம், கொழுப்பு மற்றும் சிறிய அளவில் வைட்டமின்களும் தாது உப்புக்களும். இவற்றில் பொங்குவதற்கு முக்கியக் காரணம் மாவுச் சத்தும் புரதமும். இவை சூடாக்கப்பட்ட நீர் மூலக்கூறுகளுடன் சேரும்போது அவற்றின் குணாம்சங்களும் கட்டமைப்பும் மாறுகின்றன. மாவுச் சத்தும் புரதங்களும் கொலாய்ட்(colloids) எனும் நிலைக்கு மாறி தண்ணீரில் கரையாமல் குமிழிகள் மேல் படருகின்றன.  கஞ்சி மற்றும் பாஸ்தா போன்ற பொருட்களில் அவை பிசுபிசுப்பான ஜெல்லாக மாறி கொதிநிலை 100 டிகிரிக்கு அதிகமாகிறது. உள்ளே காற்றும் வெளியே பிசுபிசுப்பான ஜெல்லும் கொண்ட குமிழிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு மேலெழும்பி பக்கவாட்டில் வழிகின்றன. பாலைப் பொறுத்தவரை சூடாக்கும்போது அதிலுள்ள கேசின் எனும் பொருள் ஆடை போல் மாறுகிறது. குமிழிகள் மேல் ஒட்டிக்கொள்ளும் அவை நுரை ரப்பர் போல் ஆகி வேகமாக மேலெழும்புகிறது. ஒரு கரண்டியை குறுக்காக வைக்கும்போது குமிழிகள் அதன் மேல் பட்டு உடைகின்றன. மேல்பகுதியில் வெப்பமும் குறைகிறது. ஆனால் இது பொங்கி வழிவதை நீண்ட நேரம் தடுக்காது. கரண்டியும் சூடாவதுடன் அதிலுள்ள துளைகளும் அடைபட்டு விடுகின்றன. எனவே குமிழிகள் உடைபடாது. பானையை கலக்குவது, பெரிய பானையாக பயன்படுத்துவது மற்றும் அடுப்பை குறைப்பது ஆகிய சரியான உத்திகளை பயன்படுத்த வேண்டும்.  சமையலறை அறிவியல் என்கிற தனித் துறையே உள்ளதாம். சி கியூ ஆஸ்திரேலிய பல்கலைக்கழக வீட்டுப் பொருளாதார துறை பேராசிரியர் ஜெய் டியாகன், கல்வி வாய்ப்பு மற்றும் சமத்துவ துறை பேராசிரியர் கெம்மா மேன் ஆகியோரது பதிவு.(சயின்ஸ் அலர்ட்)