மதுரை:
தமிழக வேளாண்துறையில் 2013 முதல் (அதிமுக ஆட்சிக் காலம்) ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தாக்கலான வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி தட்சிணாமூர்த்தியை எதிர்மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த அப்துல்லா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த பொதுநல மனுவில், “தமிழக வேளாண்மைத் துறையில் விவசாயத் திட்டங்களில் 2013 முதல் முறைகேடு நடைபெற்று வந்துள்ளது. இந்த முறைகேட்டில் 2013முதல் வேளாண் துறையில் பதவி வகித்த இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள், உதவியாளர்கள் என பலருக்குத் தொடர்பு உள்ளது”எனக் குறிப்பிட்டிருந்தார்.சொட்டு நீர்ப் பாசனத் திட்டத்திற்கான உபகரணங்களை வழங்குதல், மானிய விலையில் இயந்திரங்கள் கொள்முதல் செய்தல், விதை கொள்முதல், காமிரா, லேப்டாப், கம்யூட்டர் கொள்முதல், தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை திட்டம், நிலையான நீர்ப்பாசன திட்டம், உழவர் உற்பத்தியாளர் குழு திட்டம், டெல்டா பகுதிகுறுவை, சம்பா தொகுப்பு திட்டம், விதைக் கொள்முதல் திட்டம், பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களை போலி விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த முறைகேட்டில் 2016 முதல் 2021 வரை வேளாண் இயக்குனராக இருந்த தட்சிணாமூர்த்திக்கும் தொடர்பு உள்ளது. அவர் முன்னாள் வேளாண் அமைச்சரின் உறவினர் ஆவார். ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் பலர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். பலர் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். தமிழகத்தில்கடந்த 2013 முதல் 2021வரை வேளாண் துறையில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு செய்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு செவ்வாயன்று நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி தட்சிணா மூர்த்தியை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.