tamilnadu

img

அடுத்து நெருப்பு வளையமா, மிஸ்டர் அண்ணாமலை?

“வணக்கம்.. வணக்கம்..” கதவு மூடியிருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக் கொண்ட அண்ணாமலை, போராட்டம் எப்புடி இருந்துச்சு..? என்று தொடங்கினார். எச்.ராஜா: சாட்டையடில ரத்தம்லாம் வரும்னு நெனச்சோம்... நீங்க திறமைசாலிதான்.. அடி, கிடி படாம போராட்டத்த நடத்திட்டீங்க.. தமிழிசை: நான் டாக்டர்ங்குறத எப்பவோ மறந்துட்டேன். உங்களுக்காக மருந்து எல்லாம் எடுத்துட்டு வந்துருந்தேன்.. “இவருக்கு அடி பட்டா மறுபடியும் ஒருங்கிணைப்புக்குழு போடுவாங்கன்னு நெனச்சுக்கிட்டாங்க போல” - நிர்வாகிகள் கிசுகிசுத்தனர்  அண்ணாமலை: மத்த கட்சிக்காரங்கதான் கிண்டல் பண்றாங்கனா, நீங்களே இப்புடி பண்ணலாமா..? ஆமா.. அதென்ன நாலஞ்சு மஞ்சப்பை இருக்கு.. நிர்வாகி 1: அதுவா தலைவரே.. இப்புடி சாட்டையால அடிச்சுக்குறவங்களுக்கு அரிசி, பருப்பு, மிளகாய்லாம் குடுப்பாங்க... நாங்களே அந்த ஏரியாவுல இருந்த வீடுகள்ல போய் வாங்கிக்கிட்டோம்.. நிர்வாகி 2: தலைவரே.. அடுத்து என்ன பண்ணலாம்.. நிர்வாகி 1: வளையத்துல நெருப்பு பத்த வெச்சுக்கிட்டு உள்ள பாய்றதுதான்.. திடுக்கிட்டுப் போய் எல்லோரும் அவரையும், அண்ணாமலையையும் மாறி, மாறிப் பார்த்தனர். நிர்வாகி 2: கொஞ்சம் ரிஸ்கா இருக்குமே.. நிர்வாகி 1: ஏங்க.. அவரப் பாருங்க... சாட்டையடியே ஒண்ணும் பண்ணல.. போலீஸ் டிரைனிங் வேற.. தலையால செங்கல், ஓடுலாம் உடைக்குற மாதிரியும் யோசிக்கலாம்.. நிர்வாகி 2: தலைவரே... இந்த போராட்டத்துக்கு அமித் ஷா வந்துருந்தா, ஒட்டுமொத்த இந்தியாவுமே சாட்டையடியப் பாத்துருக்கும்.. அண்ணாமலை: உங்கள்ல யாரோதான் போட்டுக் குடுத்திருக்கீங்க... போராட்டத்த தன்னைத்தானே சாட்டையால அடிச்சுக்கிட்டு தொடங்கி வைக்கனும்னு.. அதான் பயந்துபோய் வராம இருந்துட்டாரு.. நிர்வாகி 2: வலிக்காமதான் அடிக்கப் போறோம்னு நீங்க சொல்லிருக்கலாமே.. அண்ணாமலை : சும்மா இருங்க.. வரலேன்னு என்கிட்ட கடைசிவரைக்கும் சொல்லவேயில்ல.. நிர்வாகி 2: சில மாநில நிர்வாகிங்களே வரலையே.. நிர்வாகி 1: வந்தவங்கள்ல சில பேரு எதுக்கு வந்தாங்கன்னு தெரியுமா... சாட்டைய வெச்சு தலைவர ரெண்டு சாத்து, சாத்துறதுக்கு வாய்ப்பு கிடைக்கும்னு நெனச்சுக்கிட்டாங்க.. நிர்வாகி 2: ஆமா... அந்த போட்டோகிராபர் கூட, சரியா வரலைன்னு சொன்னாரு.. அண்ணாமலை: அப்புடியா.. நிர்வாகி 2: ஆமா. மறுபடியும் அடிச்சுக்க முடியுமான்னு கேட்டாரு.. உண்மைலயே அடி விழுந்துருமோன்னு பயந்துதான் அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டோம்.. தில்லியில் இருந்து அழைப்பு என்ன அண்ணாமலை... வலிக்குதா.. இல்லீங்க.. வலிக்காம அடிச்சுக்குறதான ஏற்பாடு.. அவ்வளவுதானா.. அழைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த அழைப்பு அசாமில் இருந்து.. என்னஜி.. சாட்டையால அடிச்சுக்கிட்டீங்களாமே.. ஆமா.. ரத்தம் எதுவும் வரலியே.. அதெல்லாம் இல்லை... வலி கூட இருக்காது.. வாங்க அடிச்சுக் காட்டுறேன்.. அழைப்பு அவசரமாகத் துண்டிக்கப்பட்டது. அழைப்புகள் தொடர்ந்தன. ஒரு அழைப்பில், அந்த முனையில் உள்ளவர் கேட்கும் முன்பாகவே, “அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க.. அது சாட்டையே கிடையாது. உடம்புல பட்டா வலிலாம் இருக்காது..” என்று பேசத் தொடங்கினார். “சார்... சார்... நான் பிபிசி டிவிலருந்து பேசுறேன்..” அழைப்பைத் துண்டித்துவிட்டு வெளியேறத் தொடங்கினார் அண்ணாமலை. “என்ன ஆச்சு... உண்மையிலேயே சாட்டை அடி வாங்குன மாதிரி ஓடுறாரு... வாங்க.. வாங்க.. அடுத்த போராட்டம் நெருப்பு வளையமா.. இல்லேனா குட்டிக்கரணம் போடுறதான்னு கேட்டுருவோம்..” என்றவாறே நிர்வாகிகளும் பின்தொடர்ந்தனர். கற்பனை: கணேஷ்