புதுதில்லி, டிச. 27 - இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) வியாழனன்று இரவு காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் சுய நினைவை இழந்த நிலையில் இரவு 8:06 மணிக்கு, புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு அவசரப் பிரிவில், தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. அவரது உடல் நிலையில் பின்னடைவு நேரிட்டதை தகவல் கிடைத்த உடனேயே, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகி யோர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். இதனிடையே, சிகிச்சை பலனின்றி இரவு 9:51 மணிக்கு மன்மோகன் சிங் காலமானார். அவரது மறைவு நாட்டு மக்களை யும், காங்கிரஸ் தலைவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
அரசு நிகழ்ச்சிகள் ரத்து
2004 முதல் 2014 வரை பத்தாண்டு காலம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த டாக்டர் மன்மோகன் சிங் மறை வையொட்டி, டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை நாடு முழுவதும் 7 நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப் படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. மேலும், குடியரசுத் தலைவர் மாளி கை உட்பட நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவிட்டது. அரசுத் தரப்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பொழுதுபோக்கு நிகழ்வுகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்து அறி விக்கப்பட்டது. இதனிடையே, டாக்டர் மன்மோ கன் சிங் உடலானது, அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர் கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக, வெள்ளிக்கிழமை காலை தில்லியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது.
தலைவர்கள் நேரில் அஞ்சலி
கட்சி மாநாட்டிற்காக பெங்களூரு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர், அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, தில்லிக்குத் திரும்பி னர். மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மன்மோகன் சிங் இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் வருகை தந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரும் நேரில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
உலகத் தலைவர்கள் இரங்கல்
மன்மோகன் சிங் மறைவுக்கு நாட்டின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி, உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். “இந்தியா தனது மிகச்சிறந்த நம்பிக்கைக்குரிய மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது” என்று கூறியுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து ஆளுநர் ஆர்.என். ரவி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின், டாக்டர் மன்மோகன் சிங் உட லுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். அரசு மரியாதையுடன் இன்று இறுதி நிகழ்ச்சி டாக்டர் மன்மோகன் சிங்-கின் இறுதி நிகழ்ச்சிகள் சனிக்கிழமை (டிச.28) நடைபெறவுள்ள நிலையில், இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் 14-ஆவது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங் கடந்த 1932 செப்டம்பர் 26-ல் மேற்கு பஞ்சாப்பில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். உலகப் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்போர்டு, பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற மன்மோகன் சிங், பஞ்சாப், தில்லி பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றினார்.
சத்தியமூர்த்தி பவனில் கே. பாலகிருஷ்ணன் அஞ்சலி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் வெ. ராஜசேகரன், சிபிஐ மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “நாட்டின் முன்னேற்றத்திற்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட டாக்டர் மன்மோகன் சிங்கின் இழப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 2004-ஆம் பிரதமராக பொறுப்பேற்ற அவருக்கு, குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் இடதுசாரிகள் பக்கபலமாக இருந்தனர். இடதுசாரிகளின் கோரிக்கைகளை ஏற்று, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம், வன உரிமைச் சட்டம் போன்றவற்றை நிறைவேற்றினார். அவரது பிரிவால் வாடும் காங்கிரஸ் கட்சி நண்பர்கள், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
அப்பழுக்கற்ற தலைவராக விளங்கியவர் மன்மோகன் சிங் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு இரங்கல்
புதுதில்லி, டிச. 27 - டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: “முன்னாள் பிரதமரும், புகழ்பெற்ற பொருளாதார நிபுண ருமான டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. டாக்டர் மன்மோகன் சிங், பிரதமராகப் பணியாற்றிய பத்தாண்டு காலத்தில், மதச்சார் பின்மை மற்றும் ஜனநாயக விழு மியங்களைப் பாதுகாப்ப தற்காக உறுதியாக நின்றார். நாட்டின் நலன்களுக்கு நன்மை பயக்கும் என்று அவர் நம்பிய கொள்கைகளின் அடிப்படை யில் செயல்பட்டார். எவரும் கேள்வி கேட்கமுடியாத விதத்தில் அப்பழுக்கற்றத் தலைவராக விளங்கினார். அவரை இழந்து வாடும் அவரது மனைவி குர்சரண் கவுர் மற்றும் அவரது மகள்களுக்கு அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது” இவ்வாறு அரசியல் தலைமைக்குழு குறிப் பிட்டுள்ளது. (ந.நி.)