பழுதடைந்த அங்கன்வாடி கட்டடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்ட கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட இலுப்பூர் ஊராட்சியில், பழுதடைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலுப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் அருகில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து ஏராளமான குழந்தைகள் அடிப்படை கல்வி மற்றும் சத்தான உணவுகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கன்வாடி மையம் கட்டடம் கடந்த 2013 ஆம் ஆண்டு ரூ.88 ஆயிரம் மதிப்பீட்டில் பழுது நீக்கம் செய்யப்பட்டு இயங்கி வந்தன. இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த அங்கன்வாடி மைய கட்டடம் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து விரிச்சல் ஏற்பட்டு, சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. மேலும் மழைகாலங்களில் கட்டடத்தில் மழைநீர் கசிவால் குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கட்டடத்தின் வெடிப்புகளில் பாம்புகள் மற்றும் விஷப் பூச்சிகள் அடைவதால் அச்சத்தில் இருந்து வருகின்றனர். பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் சத்துமாவு, கல்வி உபகரணங்கள் வைப்பதற்கு போதுமான இட வசதி இல்லாததால் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு, பழுதடைந்த கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.