tamilnadu

img

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர கோரிக்கை

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர கோரிக்கை

தஞ்சாவூர் - அரியலூர் மாவட்டங்களை இணைக்கிற வகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் எப்போது கட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு  கோவிந்த நாட்டுச்சேரி, அதன் சுற்று வட்டார கிராம மக்களிடையே எழுந்துள்ளது.  தஞ்சாவூர் - அரியலூர் மாவட்டங்களை இணைக்கின்ற வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே குடிகாடு - மேல ராமநல்லூர் இடையே உயர் மட்ட பாலம் கட்டப்பட வேண்டும் என்பது 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆறு, மேலராமநல்லூர் கிராமத்திற்கு முன்பாக வடக்குக் கொள்ளிடம், தெற்கு கொள்ளிடம் என இரண்டாகப் பிரிந்து, மீண்டும் ஒன்றாக இணைகிறது. இந்த இரு பிரிவுகளுக்கும் இடையில்  அமைந்துள்ளன தீவு கிராமங்களான கீழ ராமநல்லூர், மேலராமநல்லூர். மேலராமநல்லூர் கிராமத்தின் வடக்கே அரியலூர் மாவட்டமும், தெற்கே தஞ்சாவூர் மாவட்டமும் அமைந்துள்ளது.  அரியலூர் மாவட்டத்திலிருந்து, மேலராமநல்லூர் கிராமத்தை இணைக்கிற வகையில் கொள்ளிடம் ஆற்றின் வடக்குப் பிரிவு ஆற்றின் குறுக்கே பொதுப் பணித் துறையினரால் 2016 ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேல ராமநல்லூர், கீழ ராமநல்லூர் கிராமங்களைச் சேர்ந்தவர்களும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகிய மணவாளம், ஏலாக்குறிச்சி, வரப்பன்குறிச்சி காமராசவல்லி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தாங்கள் விளைவித்த காய்கறி உள்ளிட்டவற்றை சந்தைப்படுத்தவும், அவசரத் தேவைக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரவும், 40 கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.  கொள்ளிடத்தில் தண்ணீர் இல்லாதபோது, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வர, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே நடந்தே வருகின்றனர். மழைக் காலங்களில் ஆற்றில் நடந்தோ, பரிசல் மூலமோ கடக்கும்போது உயிரிழப்பு ஏற்படுகிறது. வெள்ளப் பெருக்கு காலங்களில் மேல ராமநல்லூர் மக்கள் கபிஸ்தலம் செல்ல திருமானூர் வழியாக 40 கி.மீ தூரம் சுற்ற வேண்டியுள்ளது.  மேலராமநல்லூர் கிராமத்தை தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்துடன் இணைக்கிற வகையில் கொள்ளிடத்தின் தெற்குப் பிரிவு ஆற்றின் குறுக்கே, உயர் மட்ட மேம்பாலம் கட்டப்படுமானால் அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர், கீழராமநல்லூர், அழகிய மணவாளன், ஏலாக்குறிச்சி, காமரசவள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் மேட்டுத் தெரு, குடிகாடு, கணபதி அக்ரஹாரம், கபிஸ்தலம், பாபநாசம் பகுதியை 3 கி.மீ தூரத்தில் சென்றடைய முடியும் என்கின்றனர்.  இதே போன்று கோவிந்த நாட்டுச்சேரி, உள்ளிக்கடை, கணபதி அக்ரஹாரம், உம்பலாப்பாடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அரியலூர் ரயில்வே ஸ்டேஷன் செல்ல இந்தப் பாலம் உதவும்.  தமிழக அரசு மேற்படி பாலம் கட்டும் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்பது கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெய்சங்கர், மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களின் கோரிக்கையாகும்.