தஞ்சாவூரில் புதுப்பிக்கப்பட்ட ராஜராஜசோழன் மணிமண்டபம் திறப்பு
தஞ்சாவூர், மே.1- தஞ்சாவூரில் ரூ.3.66 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ராஜராஜசோழன் மணிமண்டபம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்துப் பேசும்போது, தஞ்சாவூரில் கடந்த 1994-95 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட மாமன்னன் ராஜராஜசோழனின் மணிமண்டபம், அதன்பிறகு, புதுப்பிக்கப்படாமல், பாதுகாக்கப்படாமல் இருந்தது. தமிழக முதல்வரின் உத்தரவின்படி, இந்த மணிமண்டபத்தில் புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் ரூ. 3.66 கோடியில் முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில், மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு வர்ணம் பூசுதல், மேற்கூரை பழுதுபார்த்தல், அருங்காட்சியகத்தின் வெளிப்புறச் சுவர் மின் கசிவிலிருந்து பாதுகாத்து தடுத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் க.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரை விற்பனை: மருந்துக் கடைக்கு சீல் வைப்பு
புதுக்கோட்டை, மே 1- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் தனியார் மருந்து கடையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு, ஹரியானா மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், ஹரியானாவிலுள்ள தனியார் மருந்து நிறுவனத்திடமிருந்து, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியிலுள்ள தனியார் மருந்துக் கடைக்கு 100 எண்ணிக்கையிலான கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அறந்தாங்கி சரக மருந்து ஆய்வாளர் விமல்ராஜ், குடும்ப நலத் துறை மாவட்ட துணை இயக்குநர் கோமதி ஆகியோர் புதன்கிழமை மணமேல்குடிக்கு நேரில் சென்று அந்த மருந்துக் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருந்துக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோடை காலத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை
திருத்துறைப்பூண்டி, மே.2- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயபிரகாஷ் பேசும்போது, சென்னையில் புரட்சியாளர் காரல்மார்க்ஸ் சிலை வைப்பதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். பிஎஸ்ஆர் மணிமண்டபத்தை சீரமைத்து சிலை வைப்பதற்கு நிதி வழங்கியதற்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அரசு அறிவித்ததை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியும், புதிய சாலைகள் அமைத்ததில் 80 சதவீதம் நிறைவு பெற்றதற்கும், இசிஆர் சாலையில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் குறிப்பிட்டார். அதன் பிறகு, 11 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராமலோகேஸ்வரி பேசும்போது, கோடை காலம் துவங்கும் நிலையில், குடிநீர் அதிகமாக தேவைப்படுவதால் கூடுதலாக குடிநீர் வசதி அமைத்து தர வேண்டியும், பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டியும், நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு தற்போது மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளம் வழங்கிட வேண்டும் என்றார்.