பேரா. காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது!
முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஜூலை 4 - தமிழக அரசு வழங்கும் ‘தகைசால் தமிழர்’ விருது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவையொட்டி, தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. முதன் முதலாக 2021-ஆம் ஆண்டு சிபிஎம் முதுபெரும் தலைவர்- விடுதலைப் போராட்ட வீரர் என். சங்கரய்யாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆர். நல்லகண்ணு, குமரி அனந்தன், கி. வீரமணி ஆகியோருக்கு தகைசால் தமிழர் விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நடைபெற்றது. இதில், மூத்த அரசியல் தலைவரும், ‘மணிச்சுடர்’ இதழின் ஆசிரியருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் - இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன் சமூக நல்லிணக்கத்திற்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்து வருபவர் என்பதை கருத்தில் கொண்டு அவரை இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்து முடிவெடுக்கப்பட்டு உள்ளது. தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுக்கு பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்பட உள்ளது.