“இலக்கியத்தில் அரசியல் குறுக்கீடு ஆபத்தானது” தேசிய அளவில் ‘செம்மொழி இலக்கிய விருது’கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு! சென்னை, ஜன.18 - “கலை இலக்கிய விருது களில் கூட அரசியல் குறுக் கீடுகள் செய்வது ஆபத்தா னது” என்று எச்சரித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய மொழிகளின் சிறந்த படைப்பு களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய அள விலான உயரிய விருதுகள் வழங்கப்படும் என அதிரடி யாக அறிவித்துள்ளார். சென்னையில் ஞாயி றன்று நடைபெற்ற 4-வது சென்னை பன்னாட்டுப் புத்த கத் திருவிழாவின் நிறைவு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், ஒன்றிய அர சின் சாகித்ய அகாடமி விருது அறிவிப்பில் நிகழ்ந்துள்ள அரசியல் தலையீடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகை யில் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட் டார். சாகித்ய அகாடமி விவகாரமும் தமிழ்நாடு அரசின் எதிர்வினையும் சமீபத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகா டமி விருதுகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப் பட இருந்த நிலையில், ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறையின் தேவையற்ற தலையீட்டால் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக முத லமைச்சர் குறிப்பிட்டார். கலை மற்றும் இலக்கியத் தளங்களில் அரசியல் குறுக் கீடுகள் நுழைவது ஆரோக்கி யமான ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று சாடிய அவர், இத்த கைய நெருக்கடியான சூழ லில் தமிழ்நாடு அரசு ஆக்கப் பூர்வமான எதிர்வினையை ஆற்ற வேண்டும் என்ற படைப் பாளிகளின் கோரிக்கையை ஏற்று இம்முடிவை எடுத்து ள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, முதல்கட்டமாக தமிழ், தெலுங்கு, கன்ன டம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டி யம் ஆகிய ஏழு மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் “செம் மொழி இலக்கிய விருது” வழங்கப்படும். இந்த விருது டன் தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப் படும் என்றும், இதற்கான தேர்வு முறையை நடுநிலை மை மிக்க சிறந்த இலக்கிய ஆளுமைகள் அடங்கிய குழுக்கள் மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதி அளித் தார். தமிழை உலகுக்கும் உலகைத் தமிழுக்கும் இணைக்கும் பாலம் ‘நாகரிகங்களுக்கு இடையேயான ஒரு உரை யாடல்’ என்ற உயரிய நோக்கத் தோடு நடைபெற்ற இந்த பன்னாட்டுப் புத்தகத் திரு விழா, சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள் ளது. கடந்த 2023-இல் வெறும்24 நாடுகளுடன் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, திமுக அரசின் தொடர் முன்னெடுப்புகளால் இன்று 102 உலக நாடுகளின் பங்கேற்புடன் ஒரு மாபெரும் அறிவுச் சங்கமமாக வளர்ந்து நிற்கிறது. குறிப்பாக, உலகப்புகழ் பெற்ற பிராங்க்பர்ட் புத்தகக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ‘மதிப்புறு விருந்தினராக’ பங்கேற்றது, சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் உலகளாவிய அந்தஸ்தை நிலைநாட்டியுள்ளது. சுமார் 1830-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள இந்த நிகழ்வின் மூலம், தமிழின் சங்க இலக்கியங்கள் முதல் நவீன படைப்புகள் வரை உலக மொழிகளுக்குக் கொண்டு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. “தமிழை உலகுக்கும், உலகைத் தமிழுக்கும்” கொண்டு சேர்க்கும் இந்த உன்னத நோக்கத்திற்காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் மொழிபெயர்ப்பு மானியமாக வழங்கப்படுவதை முதல்வர் சுட்டிக்காட்டினார். மேலும், துருக்கி, மலேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுடன் கலாச்சார மற்றும் இலக்கியப் பரிமாற்றத்திற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அவர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. 84 புதிய நூல்கள் வெளியீடு மற்றும் எதிர்காலத் திட்டம் நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, திருக்குறள் மொழி பெயர்ப்பு உட்பட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 44 நூல்கள் மற்றும் பொது நூலகத் துறையின் 40 நூல்கள் என மொத்தம் 84 புதிய நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார். சர்வதேச புக்கர் பரிசை வென்ற கன்னட பெண் எழுத்தாளர் பானு முஸ்தாக் இவ்விழாவில் பங்கேற்றதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், அவருடைய படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதால்தான் உலகளாவிய அங்கீகாரம் கிடைத்தது என்றும், அதுபோன்ற ஒரு வாய்ப்பைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு திமுக அரசு உருவாக்கித் தரும் என்றும் கூறினார். தனது உரையின் நிறைவாக, தமிழ்நாடு என்பது தொழில் முதலீட்டுக்கு மட்டுமல்லாமல், அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிகச் சிறந்த மாநிலம் என்பதை கீழடி மற்றும் பொருநை நாகரிகத் தொல்லியல் சான்றுகள் உலகிற்கு உரக்கச் சொல்கின்றன என்றார். வரும் காலங்களில் இதைவிடப் பிரம்மாண்டமான முறையில் பன்னாட்டுப் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் நவீன நூலகங்கள் எனும் அறிவுக் கோயில்கள் திமுக அரசால் எழுப்பப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். விழாவில் அமைச்சர்கள் திரு. பி.கே. சேகர்பாபு, முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
சிபிஎம் வரவேற்பு
தமிழ்நாடு அரசு சார்பில் தேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மகிழ்வுடன் வரவேற்கிறது என, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அதில் மேலும் கூறியிருப்பதாவது: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம், ஒடியா, வங்காளம், மராட்டியம் ஆகிய செம்மொழிகளில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்புகளுக்கு தனித்தனியாக விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது பொருத்தமானது. இந்த விருதுகளை தேர்வு செய்ய சுயேச்சை தன்மை கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ஒன்றிய பாஜக கூட்டணி அரசு அனைத்து அமைப்புகளையும் தனது கைப்பாவையாக மாற்றி வருகிறது. இந்தாண்டு சாகித்ய அகாடமிக்கான படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஒன்றிய அரசு தலையிட்டு விருதுகள் அறிவிப்பதை நிறுத்தி வைத்துள்ளது; இதுவரை இந்த விருதுகள் அறிவிக்கப்படவில்லை. தங்களது பிற்போக்கு கருத்துகளுக்கு ஆதரவானவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு கருதுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த நிலையில், இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும், பல்வேறு மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்களை அங்கீகரிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு சிறப்பான ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கு குறைவான நிதியே ஒதுக்கும் நிலையில், சமஸ்கிருத மொழிக்கு மட்டும் கோடிக்கணக்கில் அள்ளித் தருகிறது. அனைத்து மொழிகளையும் சமமாக நடத்துவதும், அங்கீகரிப்பதுமே இந்திய ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும். அந்த வகையில், தமிழ் மட்டுமின்றி ஏனைய மாநில மொழிகளில் வெளியாகும் படைப்புகளுக்கும் விருது வழங்குவது என்ற தமிழ்நாடு அரசின் முடிவு மொழி வெறுப்பரசியலுக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்ற வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
