மதுரை:
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலையீட்டின் பேரில் பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி), ரூ.3.23 கோடியை விடுவித்துள்ளது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மகத்தான பணிகளை ஆற்றி வருகிறது. இப்பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் 12வது ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ் கிடைக்கப்பெற வேண்டிய தொகைகள் பல்வேறு இனங்களில் முழுமையாக விடுவிக்கப்படாமல் கிடப்பில் போடப் பட்டிருந்தது. இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர், கடந்த மார்ச் மாதத்தில் யுஜிசிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பாக தலையீடு செய்து உதவுமாறு பல்கலைக்கழக பதிவாளர், மதுரைநாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 3 அன்று, யுஜிசி செயலாளர் பேராசிரியர் ரஜனீஷ் ஜெயினுக்கு கடிதம் எழுதினார். தமிழ்ப் பல்கலைக்கழ கத்திற்கு யுஜிசியின் 12வது ஐந்தாவது திட்டத்தின்கீழ் கிடைக்கப்பெற வேண்டிய தொகைகளை விடுவிக்குமாறு அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், இதை பரிசீலினை செய்து, பல்கலைக்கழக மானியக்குழு, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டியரூ.3கோடியே22லட்சத்து 82 ஆயிரத்தை முழுமையாக வழங்க முடிவு செய்து அதற்கானஉத்தரவை செப்டம்பர் 14 செவ்வாயன்று பிறப்பித்துள்ளது.இத்தகவலை சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்த தமிழ் பல்கலைக்கழகதுணைவேந்தர், அவரது உரிய தலையீட்டிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இத்தொகை, பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறை களுக்கான தேவைகள், நிலுவையில் உள்ள பணிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு உரிய உதவி என பல்வேறு தேவைகள் நிறைவேற்றுவதற்கு பயன்படும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.