பினராயி விஜயன் - முதலமைச்சர் , கேரள அரசு
.ஓணம் என்பது கேரளாவின் அறுவடைத் திருநாள் மட்டுமல்ல; செழுமையும் சமத்துவமும் நிறைந்த ஒரு புராணக் காலத்தை நினைவூட்டும் பண்டியையுமாகும். ஆண்டுதோறும், ஓணம் பண்டிகை, பாகுபாடற்ற, சமத்துவம் மற்றும் செழிப்பு நிறைந்த ஒரு உலகை உண்மையில் அடைய முடியும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. இந்நாளில் தீக்கதிர் நாளிதழின் அனைத்து வாசகர்களுக்கும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மு.க.ஸ்டாலின் - முதலமைச்சர், தமிழ்நாடு அரசு
அறுவடைத் திருநாளாம் ஓணத்தினை எழுச்சியோடும் ஏற்றத்தோடும் கொண்டாடும் என் மனதிற்குரிய மலையாள உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்! பூக்களம், புத்தாடை, அறுசுவை உணவு, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளுடன் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் கேரள மக்களின் சகோதர உணர்வையும் வெளிப்படுத்தும் கொண்டாட்டமாக அமைந்துள்ள திருநாள்தான் ஓணம். “மாயோன் மேய ஓண நன்னாள்” என சங்கத் தமிழிலக்கியத்திலும் பதிவாகியுள்ள, திராவிட இனத்தின் திருவிழாவாக திருவோணம் விளங்குவதாக தெரிவித்துள்ளார். ஓணத்தின் மீது சமத்துவத்துக்கு எதிரான குழுவினர் புனைந்த கதைகளில் இருந்தும், நம் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து, நல்லாட்சி புரிந்த மாவலி மன்னனை நினைவுகூரும் கொண்டாட்டமாக மலையாளிகள் ஓணத்தைப் போற்றி வருகின்றனர். திராவிட உணர்வெழுச்சியுடன் தமிழ்நாட்டுக்கு உறுதுணையாக நின்று, தென்னகத்தின் தனிச்சிறப்பைப் பறைசாற்றும் மலையாளச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இந்த ஓணம் பொன்னோணமாக திகழ வாழ்த்துகள்!
எம்.வி.கோவிந்தன் - கேரள மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
அனைத்து மலையாள மக்களுக்கும் சமத்துவம் சகோதரத்துவம் மற்றும் அன்புநிறைந்த ஓணம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு வகையான வண்ணப்பூக்களுடன் நமது அன்பிற்குரியவர்களும் ஒன்றுசேரும்போதுதான் பூக்கோலம் மேலும் அழகுவாய்ந்ததாகிறது. மனதால் நாம் ஒன்றிணையும்போது உலகளாவிய மனிதநேயம் மலர்கிறது. அத்துடன் உலகளாவிய மனிதநேயப் பூக்கோலமிடுவதற்கு அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன். அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.பாலகிருஷ்ணன் - அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
உலகம் முழுவதுமுள்ள மலையாள மொழிபேசும் சகோதரர்-சகோதரிகள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த சகோதரப்பூர்வ ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் பன்முகப் பண்பாட்டைப் பறைசாற்றும் விழாக்களில் ஒன்றாக ஓணம் திருநாள் விளங்குகிறது. இந்த திருநாளன்று வாசலில் அலங்கரிக்கப்படுகிற அத்தப்பூக் கோலம்போல அனைத்துப் பகுதி மக்களின் வாழ்க்கையும் வண்ணமயமாக விளங்கிட வேண்டும். கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சிக்குரியது. மக்கள் ஒற்றுமை மதச்சார்பின்மை மத நல்லிணக்கம் என அரசியல் சட்டத்தின் விழிமியங்களை உயர்த்திப் பிடித்துவரும் கேரள மக்களுக்கு மீண்டும் ஒருமுறை ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.என்.பாலகோபால் - நிதித்துறை அமைச்சர், கேரளஅரசு
ஓணம் பண்டிகையானது கேரளாவின் ஒரு மிக முக்கிய சிறப்புத் திருவிழாவாகும். உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் ஓணம் பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடிவருகிறார்கள். ஓணம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைக் கொண்டாடும் திருவிழாவாகும். நமது நாடும் மற்றும் நமது மாநிலமும் மிகச்சிரமமான காலத்தில் கடந்து கொண்டிருக்கிறது. இந்த சமூகத்தைப் பிளவுபடுத்த வெவ்வேறு சக்திகள் முயற்சித்து வருகின்றன. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஓணம் பண்டிகையின் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற செய்தியை நாம் உயர்த்திப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்.
பெ.சண்முகம் - தமிழ்நாடு மாநிலச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
கேரளத்தில் மகத்தான அறுவடைத் திருவிழாவாம் ஓணம் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் உரித்தாக்கிக் கொள்கிறேன். இதையொட்டி வெளியாகும் தீக்கதிர் சிறப்பிதழ் சிறப்புற வாழ்த்துகிறேன்.