குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கக் கோரி சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெ.அன்பு தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் இந்திராணி, மணிமுத்து, பத்மா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.வெள்ளைச்சாமி தொடக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் க.அய்யாத்துரை பேசினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.மலர்விழி மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கு.சத்தி நிறைவுரையாற்றினார். முன்னதாக, மாவட்டப் பொருளாளர் எம்.செல்வம் வரவேற்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.அன்புமணி நன்றி கூறினார். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் அகவிலைப்படியையும் சேர்த்து வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவப்படி வழங்க வேண்டும். இலவச மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். ஈமச்சடங்கு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.