tamilnadu

img

என்.எஸ்.எனும் ஈரெழுத்து மந்திரம் - அ.சவுந்தரராசன் மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

அ.சவுந்தரராசன் 
மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

என்.எஸ் என்கிற ஈரெழுத்து மந்திரம் அனைத்து அரசியல் கட்சியினரா லும், அனைத்துப் பிரிவு மக்களாலும் மதித்து மரியாதைப்படுத்துகிற ஒன்றாக மாறிவிட்டது. பொது வாழ்வில் தூய்மை என்கிற சிகரத்தைத்தொட்ட அந்த மாமனிதர் தனது நூறாவது வயதில் ஜூலை 15, 2021 அன்று நுழை கிறார். நெடுநாள் வாழ்ந்தார் என்பதில் சிறப்பில்லை. அந்த நாட்கள் அனைத்தும் தேச மக்கள் பயனுற வாழ்ந்தார் என்பதில்தான் சிறப்பும் பெருமையும் இருக்கி றது. பொது வாழ்வில் சபலமோ, தடுமாற்றமோ, ஊசலாட்டமோ இல்லாமல், இல்லாதோர் நலனை மட்டுமே நெஞ்சில் ஏந்தியபடி நேர்கொண்டு நடப்பது தான் சாதனை. அந்தச் சாதனையின் சமகாலத்து சான்றாகிவிட்டார் தோழர்  என்.எஸ். அவரைப்பற்றி எழுத ஏராளம் இருக்கிறது.

ஒருவரின் கொள்கைப் பற்றை, சித்தாந்தப் பிடிப்பை, கொடிய அடக்குமுறைகளை அவர் எதிர் கொள்ளும் போது வெளிப்படுத்துகிற நெஞ்சத்து உறுதியைக் கொண்டுதான் அளவிட முடியும். சமாதான காலத்து வீரவசனங்களைக் கொண்டு அதைத் தீர்மானிக்க முடியாது. அந்த அளவுகோளின்படி தோழர் என்.எஸ் கொள்கைக்  குன்றென செம்மாந்து நிற்கிறார். அவர்காலத்து வீரப்புதல்வர்களின் தியாக ஜோதியில் தெறித்த ஒளிக் கீற்றாய் இன்றும் இளைஞர்களை கிளர்ச்சிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். எண்ணிப் பார்க்கலாம் அவரது நெடும் பயணத்தை!  1922ல் பிறந்த அவர் 19வது வயது மாணவனாய் இருந்தபோதே சிறைப் பட்டார், சித்திரவதைப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சி ஒவ்வொரு போராட்டத்தையும் மூர்க்கத்தனமாக ஒடுக்கிக் கொண்டிருந்த காலம் அது. காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்கள் பெரும் அடக்குமுறைத் தாக்குதலை எதிர் கொண்டது.

கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ஏராளமான சதி வழக்குகள் புனையப்பட்டு நூற்றுக்கணக்கான தலைவர்களும், தோழர்க ளும் சொல்ல இயலாத கொடுமைகளுக்கு ஆளானர்கள். ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் கம்யூனிசத் தாக்கம் ஏகாதிபத்திய நாடுகளை அச்சுறுத்தி கிலி கொள்ளச் செய்து கொண்டிருந்தது, ஏகாதிபத்தியவா திகள் கம்யூனிட்டுகளை விஷப்பூச்சிகள் என்றும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கங்கணம் கட்டிக் கொண்டு நடவடிக்கையில் இறங்கியிருந்தனர். புதுப்புது அடக்குமுறைச் சட்டங்கள் போடப்பட்டன. நெருப்பாற்றில் நீச்சல்  இப்படிப்பட்ட ஒரு காலத்தில் தெரிந்தே நெருப்பாற்றில் குதிப்பேன், எதிர்நீச்சல்போடுவேன் என்று விடுதலைப் போராட்டத்திலும், பின்னர் கம்யூ னிஸ்ட் இயக்கத்திலும் இறங்குவது எளிதல்ல. வாழ்வின் வசந்த காலம் வா, வா என்ற அழைத்துக் கொண்டிருக்கும் வாலிப வயதில் தோழர் என்.எஸ்.நெருப் பாற்று நீச்சலை தேர்ந்தெடுத்தார். என்பதில்தான் தனித்தன்மை இருக்கிறது. தோழர்கள் பி.ராமமூர்த்தி,  வி.பி.சிந்தன், ஆர்.உமாநாத், ஏ.பாலசுப்பிரமணி யன், எம்.ஆர்.வெங்கட்ராமன், கே.ரமணி, கே.முத்தையா, கே.அனந்த நம்பி யார் என்று பட்டியலிட்டால் இந்தப் பாரம்பரியத்துக்காரர்கள் எண்ணிக்கை ஆயிரம் பல்லாயிரம் என்று விரிந்து போகும்.

ஒரு கம்யூனிஸ்டாக தன்னை பட்டாளி வர்க்கப் புரட்சிக்கு ஒப்புக்கொடுத்த போது அவரது உள்ளத்தின் சிறு அணுவில்கூட எம்.எல்.ஏ., எம்.பி., கவுன்சிலர், கட்சியின் தலைவர் என்பது போன்ற எந்த எண்ணமும் எதிர்பார்ப்பும் தலைகாட்டியிருக்க முடியாது. கைது எப்போது, எந்த ஊரில் சிறைவாசம், தடியடி, சித்திரவதை, துப்பாக்கிச் சூடு, தூக்குக் கயிறு என்பது போன்ற விஷயங்களை எதிர்கொண்டபடி தளர்வில்லாமல் சக தோழர்களோடு நடைபோட்டார். அவர் எந்தப் பதவியையும் தேடியதுமில்லை, நாடியதுமில்லை, அவைதான் அவரைத் தேடிவந்தன.

இரண்டாவது உலக யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு சட்டத்தின் கீழ்வழக்குகள் தொடுக்கப்பட்டன. பின்னர்  சதி வழக்குகள் போடப்பட்டு, ராஜத்துரோகக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது. தெலுங்கானா ஆயுதப் புரட்சியையொட்டி, கல்கத்தா அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு அடக்குமுறை ஏவப்பட்டது. தலைமறைவு வாழ்க்கை. இந்த ஒடுக்குமுறைக ளோடும் அடக்குமுறைகளோடும் சகவாழ்வு என்றாகிவிட்ட வாழ்க்கை. எப்படி இதை தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடிந்தது என்பதில்தான் தோழர் என்.எஸ்.அவர்களும் அவரது சகாக்க ளும் நமது நரம்புகளில் முறுக்கேற்றுகின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்த பிறகு தத்துவார்த்தப் போராட்டம் ஒருபுறம், 1962ல் இந்திய - சீன யுத்தத்தின் போது மார்க்சிஸ்டுக ளை சீனக் கைக்கூலிகள் என்று பெரும் அவதூறுப் பிரச்சா ரத்தை முதலாளித்துவக் கட்சியினர் முன்னெடுத்தனர். அண்டை நாடுகள் யுத்தத்தை தவிர்த்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்ச னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கட்சி உறுதியுடன் வாதிட்டது, இதற்காக மீண்டும் கைது. 1965ல் பாகிஸ்தான் யுத்தத்தின் போது மீண்டும் மார்க்சிஸ்ட் தலைவர்கள் கைது. வாழ்வு நெடுகிலும் போராட்டத் தழும்புகளோடு “கொடுமையை எதிர்த்து நில், சிதையா நெஞ்சு கொள்” என்று முழங்கியபடி நடந்த கால்கள் 100யைத் தொடுகிறது. தமிழ்நாட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எல்லா முன்னேற்றங்களிலும் அவரது தியாகமும், உழைப்பும் உறைந்து கிடக்கிறது.அவரது வாழ்வில் இருந்து இன்றைய தலைமுறை கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம்,

அச்சம் அவர் அறியாத ஒன்று

அச்சம் தவிர்க்க வேண்டும்; பதவி ஆசைகளைத் துறக்க வேண்டும்;  கட்சியின் கூட்டு முடிவுகளை தலைவணங்கி ஏற்கவேண்டும்; முடிவுகளை செயல்படுத்த முனைப்புடன் செயல்பட வேண்டும்; ஒழுக்கம் பேணுதல் வேண்டும்; மக்கள் முன் எடுத்துகாட்டாக வாழ வேண்டும், ஜாதி, மதம், இனம் போன்ற செயற்கை வேறுபாடுகளைத் தாண்டி மனிதம் போற்ற  வேண்டும்; பெண்ணுரிமை, தீண்டாமை ஒழிப்பு போராட்டங்க ளை முன்னெடுக்க வேண்டும்; அடக்கு முறைகளுக்கு துணி வோடு முகங்கொடுக்க வேண்டும். நெறிபிறழாத கம்யூனிஸ்டு களே அவரது எண்ணம். தோழர் என்.எஸ் அப்படி வாழ்ந்து காட்டிய உன்னதம்.

தோழர் என்.எஸ் அவர்களின் வாழ்வு “மரணமிலாப் பெருவாழ்வு”!

தோழர் என்.எஸ்.புகழ் போற்றி! போற்றி!

அவர் வழி நடப்போம்! புரட்சி தீபம் ஏற்றி! ஏற்றி!!