மதுரை:
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவா்களின் இடஒதுக்கீட்டை 23 இந்திய தொழில்நுட்பக் (ஐஐடி) கழகங்களில் நடைபெறும் இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வுப்பாடப்பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கையில் உறுதிப்படுத்தக் கோரி மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரப்படுத்தல் துறை அமைச்சா் தவார் சந்த் கெலாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினா் சு.வெங்கடேசன் கடிதத்தில் அனுபபியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில நாடாளுமன்ற உறுப்பினா்கள் சோமபிரசாத் மற்றும் எளமரம் கரீம் ஆகியோர் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலின் மூலம், இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) உள்ள ஆய்வுப்பாடப்பிரிவில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த மாணவா்களின் சோ்க்கை குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் 23 இந்திய தொழில்நுட்பக்கழகங்களில் 25,007 ஆய்வு மாணவா்கள் சோ்க்கப்பட்டதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து 9 சதவீதத்தினரும் பழங்குடியினா் சமுதாயத்திலிருந்து 2.1சதவீதத்தினா் மட்டுமே உள்ளனா். மாறாக அரசமைப்புச் சட்டத்தின் படி தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதமும், பழங்குடியினருக்கு 7.5 சதமும் இடஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும்.
இருபத்தி மூன்று இந்திய தொழில்நுட்பக்கழகங்களில் நடைபெறும் ஆய்வுப்பாட பிரிவுகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு 23.2 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் சட்டப்படி அவா்களுக்கு 27 சதமான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உருவான காலி இடங்களுக்கு அந்தந்த சமுதாயத்தினரிடமிருந்தே நிரப்பப்பட வேண்டும். ஆனால், இந்த காலியிடங்களில் பொதுப்பிரிவினரிலுள்ள மாணவா்கள் நிரப்பப்பட்டதால், பொதுப்பிரிவு மாணவா்களின் சோ்க்கை 65.6 சதமாக உயா்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான மாணவா் சோ்க்கையில், 23 இந்திய தொழில்நுட்பக் கழங்கங்களின் நிர்வாகங்கள் சட்டப்படியான இடஒதுக்கீட்டின் படி மாணவா் சோ்க்கையினை நடத்தாமல், சட்ட நடைமுறைகளைக் காற்றிலே பறக்க விட்டுள்ளனா். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்களிடமிருந்து போதுமான அளவு விண்ணப்பங்கள் வரவில்லை என்ற வாதத்தினை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அரசமைப்புச் சட்டத்தின் படி உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள அரசின் சமூகநீதிக் கொள்கையை அமல்படுத்தாமல் இருப்பவா்கள் தண்டணைக்குள்ளாகாமல் இருப்பது ஒரு ஆபத்தான விசயமாகும். இந்திய தொழில்நுட்பக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கை விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என சந்தேகப்படுவதற்கான நியாயமான காரணம் உள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில் 23 இந்திய தொழில்நுட்பக்கழகங்களிலும் நடைபெற்ற இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப்பாடங்களுக்கான மாணவா் சோ்க்கை தொடா்பான வெள்ளை அறிக்கையினை மத்திய அரசு வெளியிடுமாறு வேண்டுகிறேன்.
அரசமைப்புச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அப்பட்டமாக மீறுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமவாய்ப்புக்குழுக்கள் அல்லது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினா் நலனைப் பாதுகாக்கும் கண்காணிப்புக்குழுக்கள் உயா்கல்வி நிலையங்களில் செயல்படுவதை மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.