tamilnadu

img

மக்களின் நலவாழ்வை உறுதிப்படுத்தவே தொகுதி மேம்பாட்டு நிதி

மதுரை:
மனித உயிர்களைக் காப்பதே முன்னுரிமைதரப்பட வேண்டிய பணி. எனவே பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணிகளை உடனடியாக ரத்து செய்தோம்.  அந்த அடிப்படையில் இன்னும் மீதமுள்ள தொகையில் ஒரு கோடி ரூபாய் வழங்கத் தயாராக இருக்கிறோம் என்பதைத் தெரிவித்தோம். மக்களின் நலவாழ்வை உறுதிப்படுத்தவே தொகுதி மேம்பாட்டு நிதி செலவழிக்கப்படும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைவருமாறு:

இரண்டு நாள்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்துக்கான சிறப்புக் கண்காணிப்பு அதிகாரி டாக்டர் சந்திரமோகன் அவர்களைச் சந்தித்து, மதுரையில் கோவிட்க்கு எதிரானபோராட்டத்தில் வெல்வதற்குச் செய்யவேண்டிய 15 நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக வழங்கிவிட்டு, இந்தப்பணிகளுக்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயைத் தரத்தயாராக இருக்கிறேன் என்பதனையும் தெரிவித்திருந்தேன். இந்த அறிவிப்பானது கேள்விகளையும் சந்தேகங்களையும் பலருக்கு எழுப்பியுள்ளது. அதாவது, “மோடி அரசு இரண்டு ஆண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியைப் பறித்துக்கொண்டதே, பின் எப்படி ஒரு கோடி ரூபாய் தரமுடியும்?” என்பதே அந்தக் கேள்வி. 

மோடி அரசு 2020-2021, 2021-2022ஆகிய இரண்டு நிதியாண்டுகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியினைப் பறித்துக்கொண்டது. இந்த இரண்டு நிதியாண்டுக்கான பத்து கோடி ரூபாய் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவித்துப் பறித்தது. ஆனால் எந்த அறிவிப்பும்இல்லாமல் அடித்துப்பறித்த நிதியுண்டு. அதனளவு ரூபாய் இரண்டரைக் கோடிஆகும். அதாவது 2019-2020 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி ஐந்து கோடி ரூபாய். அந்தத் தொகையை மத்திய அரசு இரண்டு தவணைகளாக மாவட்ட நிர்வாகக் கணக்கிற்கு அனுப்பிவைக்கும். அந்த அடிப்படையில் முதல் தவணையாக இரண்டரைக்கோடி ரூபாய் அனைவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இரண்டாவது தவணையான இரண்டரைக் கோடி ரூபாயானது நிதித்துறையிடமிருந்து திட்டம் மற்றும் புள்ளியியல் துறைக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அங்கிருந்து மாவட்ட நிர்வாகத்துக்கு அத்தொகை அனுப்பப்படவில்லை. நிதித்துறையே அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. 
நாடாளுமன்ற உறுப்பினர்கள், திட்டம் மற்றும்புள்ளியியல் துறை அதிகாரிகளிடம் “ஏன் இன்னும் பணம் அனுப்பவில்லை?” என்று கேட்டால் “நிதியமைச்சகத்திலிருந்து எங்களுக்குப் பணம் வரவில்லை. எனவே, தொகுதி மேம்பாட்டு நிதிக்கு வழங்க எங்களிடம் பணமில்லை” என்று தெரிவிக்கிறார்கள்.நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் அவையின் ஒப்புதலைப்பெற்ற தொகுதி மேம்பாட்டுக்கான இந்தத் தொகையானது, உறுப்பினர்களின் சம்மதம்ஏதுமில்லாமல், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதுமில்லாமல்நிதித்துறையால் பகற்கொள்ளைபோல பறிக்கப்பட்டுவிட்டது. 

நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை அறிவித்துப் பறிப்பதும் அறிவிக்காமல் அபகரிப்பதுமான இரண்டு வேலைகளையும்கோவிட்டை காரணங்காட்டி செய்து முடித்துள்ளது மத்திய அரசு. மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பறிப்பதிலே இவ்வளவு வித்தைகளைக் காட்டும் மத்தியஅரசு, மக்களின் பணத்தைப் பறிப்பதில் எவ்வளவுவித்தைகளைக் காட்டும் என்பதனைத் தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. நாள்தோறும் அதனைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில்தான் கோவிட்-19 தாக்குதல் தொடங்கியவுடனே, எனது தொகுதி மேம்பாட்டுநிதியிலிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வார்டுக்கான துணைக்கருவிகளை வாங்குவதற்கு சுமார் 56 லட்சம் ரூபாயை வழங்கினோம். அத்தொகைக்கான அனைத்துத் துணைக்கருவிகளும் கொரோனா வார்ட்டுக்குச் சென்று சேர்வதை உறுதிப்படுத்தினோம். தொடர்ந்து அரசுப் பணியாளர்களுக்கு ஒரு லட்சம் மூன்றடுக்கு முகக்கவசங்களை வழங்கினோம். 

கோவிட் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக, ஏற்கனவே வழங்கப்பட்ட பல்வேறு வேலைகளுக்கான திட்டங்கள் அரசின் நிர்வாகஉத்தரவினைப் பெற்று ஆனால் ஒப்பந்தப்புள்ளி பெறப்படாத நிலையில் இருந்தன. சாலை போடுவதையும் சாக்கடை கட்டுவதையும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ஆனால் தேசமேபெருந்தொற்றுப் பேரிடரைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மனித உயிரினைக் காப்பதேஇப்பொழுது அனைத்து வகையிலும் முன்னுரிமை தரப்பட வேண்டிய பணி. எனவே பல்வேறுதிட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணிகளை உடனடியாக ரத்து செய்தோம்.  தொகுதி மேம்பாட்டுப்பணியின் அனைத்துத் தொகையும் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்கானது என்று முடிவெடுத்தோம். அந்த அடிப்படையில்தான் ஏற்கனவே வழங்கப்பட்டது போக, இன்னும் மீதமுள்ள தொகையில் ஒரு கோடி ரூபாய் வழங்கத் தயாராக இருக்கிறோம் என்பதைத் தெரிவித்தோம். ஒருவேளை, இன்னும் செலவழிக்காமல் எம்.பி.க்களிடம் பணம் மிச்சமிருக்கிறது  என்றுஅறிந்தால் அதனையும் மத்திய அரசு பறித்துக்கொள்ளும் ஆபத்தும் உண்டு. கொரோனாவின் பேரைச்சொல்லி எதுவும் நடக்கலாம். ஆனால் கொரோனா ஆபத்தில் இருந்து மக்களைக் காக்கவே எங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைச் செலவழிப்போம் என்பதில் உறுதியாக உள்ளோம். மக்களின் நலவாழ்வை உறுதிப்படுத்தவே தொகுதி மேம்பாட்டு நிதியின் முழுத்தொகையையும் செலவு செய்வோம். ஏனெனில், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டுநிதி என்பது மக்கள் நிதி; எனவே, மக்கள் நிதி மக்களின் நலவாழ்விற்கே!இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.