ஸ்கேன் இந்தியா
அலட்சியம்
என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஆட்சியாளர்கள் பேசுவதாக மேற்கு வங்க விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உரங்களுக்கான வரியை 18 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைத்து விட்டோம். இது விவசாயிகளுக்கு பெரும் வரம் என்று பாஜகவினர் சொல்லி வருவதையே அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உரங்கள் இருப்பு மற்றும் விநியோகம் ஆகியவை எப்போதுமே போதுமானதாக இருப்பதில்லை. பெரும்பாலும் கருப்பு சந்தையில் இருந்து கூடுதல் விலை கொடுத்தே வாங்குகிறார்கள். அதோடு, வரி குறைந்தவுடன் விற்பனையாளர்கள் விலையை ஏற்றிவிட்டார்கள். “ஒன்றிய அரசும், மேற்கு வங்க மாநில அரசும் இதைப் பற்றியெல்லாம் எங்கே கவலைப்படுகிறார்கள்” என்று விவசாயிகள் கேட்கிறார்கள். இதில் நாங்கள்தான் குறைத்தோம் என்று பாஜகவினரும், குறைத்ததற்கு நாங்கள்தான் காரணம் என்று திரிணாமுல்காரர்களும் போட்டி போட்டுக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
குமுறல்
அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள மேராபானி என்ற இடத்தில் நாகாலாந்து மாநிலக் காவல்துறையினரை மக்கள் விரட்டியடித்துள்ளனர். நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் மாநிலங்களுக்கிடை யில், மக்களின் பல பிரிவினருக்கிடையில் சண்டைகள் நடந்து வருகின்றன. இப்பகுதி யில் பாஜக செல்வாக்கு பெற்றபிறகுதான் இது இவ்வளவு அதிகரித்துள்ளது என்று சொல்லப்படுகிறது. அப்படியொரு பிரச்சனை தான் மேராபானியில் தொடர்கிறது. இரு மாநில மும் இந்த இடத்திற்கு உரிமை கோருகின்றன. இரண்டு மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிதான் நடக்கிறது. அமைதி தேவை என்ற நோக்கத்துடன் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று எல்லைப்புறத்து மக்கள் குமுறுகிறார்கள்.
திருட்டு
“நடன மங்கை”யின் சிலையைக் காணவில்லை என்றவுடன் தொல் பொருள் நிபுணர்கள் பலரும் பதறிப் போய்விட்டார்கள். 1926இல் அகழ்வாராய்ச்சி யின்போது மொகஞ்சதாரோவில் தோண்டி எடுக்கப்பட்ட இந்தச்சிலை தலைநகர் புதுதில்லி யில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 4,500 ஆண்டு பழமையான வெண்கலச்சிலை சிந்துசமவெளி நாகரீகம் குறித்த முக்கியமான தடயமாகும். எடுத்துச் சென்றவர் அரியானா மாநிலம் அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் என்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்து விட்டார்கள். அவரிடமிருந்து சிலையையும் மீட்டுவிட்டனர். அது உண்மையான சிலை இல்லை என்றும், “மாதிரி”தான் என்றும் துறையின் அறிக்கை கூறுகிறது. எப்படியிருந்தாலும் திருட்டுப் போகுமளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மோசமாக உள்ளனவா என்று நிபுணர்கள் வினா எழுப்பியுள்ளனர்.
ஊழல்
பீகார் பாஜகவுக்குள் பெரும் குழப்பம் நீடிக்கிறது. பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினர் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். இதில் ஜன் சுராஜ் கட்சியின் பிரசாந்த் கிஷோர் சில குறிப்பான ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளார். இந்த முறைகேடுகள் நடந்திருக்கப் பெரும் அளவில் வாய்ப்புகள் உள்ளன என்று கூறியுள்ள பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆர்.கே.சிங், ஒன்று, பதவிகளை விட்டு விலகுங்கள் அல்லது பிரசாந்த் கிஷோர் மீது வழக்கு தொடருங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். குற்றச்சாட்டுகள் துணை முதல்வர் சாம்ராட் சவுத்திரி மீதும், பாஜக மாநிலத் தலைவர் ஜெய்ஸ்வால் மீதும் சாட்டப்பட்டுள்ளன. பல பாஜககாரர்கள் மேல் உள்ளது போலவே துணை முதல்வர் மீது போலி சான்றிதழ் புகார் இருக்கிறது. ‘பாஜகனா இதெல்லாம் சகஜம்தானே’ என்று எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்கிறார்கள்.