tamilnadu

img

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணமில்லை!

மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று(29.07.24) நடைபெற்றது. அதில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறை, காவல்துறையினர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் 2020ம் ஆண்டுக்கு முன்பு இருந்த நடைமுறையை பின்பற்ற முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, உள்ளூர் வாகனங்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், ஆதார் அட்டையை காண்பித்து கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு - கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் கடந்த 12 ஆண்டுகளாக இந்த சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என திருமங்கலம் பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன. அதன் அடிப்படையில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.