tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

வாட்ஸ்அப் குழுவில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ் அப் (WhatsApp) குழுக்களில் ‘சாட் ஹிஸ்டரி’ (Group Chat History) பகிர்வு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, வாட்ஸ் அப் குழுவில் புதிய உறுப்பினர் ஒருவர் இணைந்தால், அவர் இணைந்த நேரத்திற்குப் பிறகு இடம்பெறும் உரையாடல்களை மட்டுமே பார்க்க முடிந்தது. அதற்கு முன் பகிரப்பட்ட செய்திகளைப் பார்க்க முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  புதிய அம்சத்தில் புதிய உறுப்பினர்களும் முந்தைய உரையாடல்களைப் பார்க்கும் வகையில் மெட்டா நிறுவனம் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியின் படி, வாட்ஸ்அப் குழுவில் இணையும் புதிய உறுப்பினர்கள், கடந்த 14 நாட்களில் பகிரப்பட்ட அதிகபட்சம் 100 செய்திகளை வரை பார்க்க முடியும். இந்த அம்சத்தை செயல்படுத்த, வாட்ஸ் அப் குழு அட்மின்கள் சில Settings-ஐ மேற்கொள்ள வேண்டும். அதற்கு Group Settings-க்கு செல்ல வேண்டும். ‘Send Message History’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்களுக்கு எத்தனை செய்திகளை (25, 50, 75 அல்லது 100) காண்பிக்க வேண்டும் என்பதை அட்மின்கள் தீர்மானிக்கலாம். இந்த அம்சம் படிப்படியாக Android, iOS மற்றும் Web பதிப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய மாணவர்களுக்கு இலவசமான  மென்பொருள்!

அடோப் நிறுவனம், இந்திய மாணவர்களுக்கு தனது மூன்று முக்கியமான மென்பொருள்களை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. தில்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் இந்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆபர் வழங்கப்படும். இதன் மூலம் பயர்பிளை (Firefly), போட்டோஷாப் (Photoshop), அக்ரோபட் (Acrobat) போன்ற அதன் முக்கிய மென்பொருட்கள் இனி இலவசமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். சுமார் 15,000 பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மென்பொருட்களுடன் பயிற்சி, பாடத்திட்டம், சான்றிதழ்கள் ஆகியவையும் வழங்கப்படும்.

விரைவில் மெசெஞ்சர் இணையதள சேவை நிறுத்தம்!

வரும் 2026 ஏப்ரல் மாதம் முதல், மெட்டா நிறுவனம் தனது மெசெஞ்சர் டெஸ்க்டாப் செயலி மற்றும் Messenger.com என்ற தனித்த இணையதள சேவை நிறுத்தப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது பயனர்கள் messenger.com இணையதளம் மூலம் மெசெஞ்சரை தனியாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், 2026 ஏப்ரல் முதல் அந்த இணையதள சேவை நிறுத்தப்பட உள்ளது. அதன் பின்னர், பயனர்கள் நேரடியாக Facebook தளத்தின் facebook.com/messages பக்கத்தின் மூலம் தங்கள் உரையாடல்களை மேற்கொள்ளலாம் என்று மெட்டா தெரிவித்துள்ளது. கணினி மட்டும் மெசெஞ்சரை தனியாக இணையதளம் மூலம் பயன்படுத்தி வந்த பயனர்களுக்கு இந்த மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, பேஸ்புக் கணக்கை இணைக்காதவர்கள் இனிமேல் கணினி வழியாக மெசெஞ்சரை பயன்படுத்த முடியாது. ஆனால், Android மற்றும் iOS சாதனங்களில் Messenger மொபைல் செயலி வழக்கம் போலவே செயல்படும். மெட்டா நிறுவனம் தனது சேவைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.